டெல்லி: ஆசிரியர் தினத்தையொட்டி நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்டுள்ள 46 ஆசிரியர்களுக்கு குடியரசு தலைவர் விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்குகிறார். அதைத்தொடர்ந்து இன்று மாலை பிரதமர் மோடி விருது பெற்ற ஆசிரியர்களுடன் கலந்துரையாடுகிறார். இந்த விருதுக்கு ராமநாதபுரத்தை சேர்ந்த ஆசிரியர் ராமச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளது தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது.
நாடு முழுவதும் இன்று (செப்டம்பர் 5ந்தேதி) ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆசிரியர் தினத்தையொட்டி, ‘தொடக்கநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் சிறந்த ஆசிரியர்களுக்கு தேசிய விருதை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த விருதுக்காக இந்த ஆண்டு இணையதளம் வாயிலாக வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற்ற மூன்று கட்ட நடைமுறைகள் மூலம் தமிழ்நாடு, புதுச்சேரி, பஞ்சாப், ஹரியானா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, இமாச்சல் பிரதேசம் உள்பட நாடு முழுவதிலுமிருந்து 46 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வு செய்யப்பட்டுள்ள 46 ஆசிரியர்களுக்கு இன்று டெல்லியில் விழா காலை 11 மணி முதல் விக்யான் பவனில் நடைபெறும் என்று கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. நடைபெறும் நிகர்ச்சியில், தேசிய விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கி கவுரவிக்கிறார். மதிப்புமிக்க விருது பெறும் ஒவ்வொரு ஆசிரியருக்கும், விருதும் தகுதிச் சான்றிதழ், ₹50,000 ரொக்கப் பரிசு மற்றும் வெள்ளிப் பதக்கம் ஆகியவை வழங்கப்படும்.
ஆசிரியர் தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இந்த சந்தர்ப்பத்தில் சிறந்த ஆசிரியரும், தத்துவ மேதையும், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவருமான எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன். மாணவர்களிடம் அறிவு மட்டுமின்றி, மனிதநேய விழுமியங்களை விதைக்க முயற்சிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் அவர் ஒரு முன்னுதாரணம். புதிய ஆராய்ச்சிகள், சோதனைகள் மற்றும் கண்டுபிடிப்புகள் மூலம் நமது ஆசிரியர்கள் தொடர்ந்து தங்கள் திறன்களையும் திறமையையும் மேம்படுத்த முயற்சிக்கின்றனர். தேசிய கல்விக் கொள்கை மூலம் நமது கல்வி முறையில் மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன. உன்னதமான ஆசிரியத் தொழிலில் அதிக திறமைசாலிகள் சேருவார்கள் என்று நம்புகிறேன். நாட்டின் நலனுக்காக எல்லா வகையிலும் உழைக்கத் தயாராக இருக்கும் பொறுப்புள்ள குடிமக்கள் உருவாகுவதற்கு அவர்களின் முயற்சிகள் காரணமாகும். அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு டெல்லி லோக் கல்யாண் மார்க்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.