லக்னோ
ஆசிரியர் நியமன ஊழலில் பெயர் அடிபட்ட உண்மையான அனாமிகா சுக்லாவுக்கு உத்தரப் பிரதேச அரசு வேலை வாய்ப்பு அளித்துள்ளது.
நலிவடைந்த குடும்ப பெண் குழந்தைகள் கல்விக்காக உத்தரப் பிரதேச மாநிலத்தில் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளிகளை அரசு நடத்தி வருகிறது. இந்த பள்ளிகள் மண்டலத்துக்கு ஒன்று என்னும் விகிதத்தில் நூற்றுக்கணக்கில் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஊதிய உயர்வுக்காக ஆவணங்கள் பரிசோதிக்கப்பட்டன.
அப்போது அனாமிகா சுக்லா என்னும் பெயரில் உள்ள ஆவணங்களை அளித்து சுமார் 25 பள்ளிகளில் ரூ.1 கோடி அளவுக்கு ஊதிய மோசடி செய்த விவரம் தெரிய வந்தது. இதையொட்டி காவல்துறை விசாரணை நடத்திய போது இந்த மோசடியில் பல பெண்கள் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது. இந்த போலி அனாமிகாக்கள் ஒவ்வொருவராகக் கைது செய்யப்பட்டனர்.
இந்த போலி அனாமிகாக்களில் முதலில் ஹர்தோய் பள்ளியில் பணிபுரிந்த அனிதா தேவி கைது செய்யப்பட்டார். அதன்பிறகு கஸ்கஞ்ச் பள்ளியின் சுப்ரியா, வாரனாசி பள்ளியின் தீப்தி, பிரயாக்ராஜ் பள்ளியின் சரிதா, கான்பூர் பள்ளியின் பாப்லி எனப் பலர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அளித்த வாக்குமூலங்களின் படி இவர்களைப் போலி ஆவணம் மூலம் இப்பணியில் அமர்த்திய புஷ்பேந்திரா குறித்துத் தெரிய வந்தது.
காவல்துறை மாநிலம் எங்கும் இவரைத் தேடி வந்தது லக்னோ நகரில் புஷ்பேந்திரா, அவர் சகோதரர் ஜஸ்வந்த் மற்றும் இரு கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் வாக்குமூலத்தின் படி உண்மையான அனாமிகா சுக்லா கொண்டா பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் இவரது சான்றிதழை இவருக்கே தெரியாமல் பயன்படுத்தி 25 பள்ளிகளில் மோசடி நடந்துள்ளதும் தெரிய வந்தது.
கடந்த 2010 ஆம் வருடத்தில் இருந்தே புஷ்பேந்திரா பல மோசடிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் தானே சுசில் என்பவரின் ஆவணங்களில் இருந்து உருவாக்கிய போலி ஆவணங்கள் மூலம் தான் ஃபருகாபாத் கல்லூரியில் பணிக்குச் சேர்ந்துள்ளார் அப்போது ராம்நாத் பிரதான் என்பவரின் நண்பராகி உள்ளார். இவர் மூலம் தனது சகோதரர் ஜஸ்வந்த் க்கு வைவப் குமார் என்னும் பெயரில் கன்னொஜ் கல்லூரியில் பணி வாங்கி தந்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு இருவருக்கும் ஆனந்த் சிங் என்பவர் நட்பு கிடைத்துள்ளது. ஆசிரியை வேலைக்கு நேர்காணலுக்கு வரும் நபர்களின் ஆவணங்களை அவர்களுக்கே தெரியாமல் ஆனந்த் சிங் சேமித்து வந்துள்ளார். சுல்தான்பூர், பஸ்தி, லக்னோ , மிர்சாபூர் ஆகிய பள்ளிகளில் ஆசிரியை வேலைக்காக விண்ணப்பித்துள்ளார். இவர் ஜவுன்பூருக்கு நேர்காணலுக்கு அழைக்கப்பட்ட போதிலும் அவர் உடல்நலக்குறைவால் போக முடியவில்லை.
இதையொட்டி அனாமிகாவின் ஆவணங்களை புஷ்பேந்திராவிடம் ஆனந்த் சிங் அளித்துள்ளார். அனாமிகாவின் ஆவணங்களை பயன்படுத்தி புஷ்பேந்திரா 25 பேருக்குப் பள்ளி ஆசிரியை பணியைப் பெற்றுத் தந்துள்ளார். தற்போது இவர்கள் பிடிபட்டுள்ள நிலையில் உண்மையான அனாமிக சுக்லாவுக்கு இதுவரை வேலைவாய்ப்பின்றி இருந்து வந்தார்.
தற்போது அனாமிகா சுக்லாவுக்கு பையா சந்திரபான் தத் வித்யாலயாவில் ஆசிரியை பணி அளிக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளிகளில் அதிக அளவில் மாணவர்கள் உள்ளதால் கூடுதல் ஆசிரியையாக அனாமிகா நியமிக்கப்பட்டுள்ளதாகப் பள்ளி நிர்வாகி திக்விஜய் பாண்டே தெரிவித்துள்ளார். இந்த பணி நியமனம் தனக்கு மனமகிழ்வை அளிப்பதாக அனாமிகா சுக்லா தெரிவித்துள்ளார்.