இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலத்தின் தேநீர் விற்பனையாளர் ஒருவரின் மகள், இந்திய விமானப்படையின் அதிகாரியாக பட்டம் பெற்றுள்ளார். இந்திய விமானப்படை அகடமி இப்பட்டத்தை வழங்கியுள்ளது. இதுதவிர, ஜனாதிபதியின் பட்டயமும் கிடைத்துள்ளது.
சுரேஷ் என்பவர், நம்தியோ டீ ஸ்டால் என்ற பெயரில், ஒரு தேநீர் கடை நடத்தி வருகிறார். அவரின் மகள்தான் ஆன்ச்சல். 23 வயதான இவர் விமானப் படை அகடமியில் முதல் மாணவியாக தேறியுள்ளார்.
“உலகில், ஒரு தந்தைக்கு, மகள் அளிக்கக்கூடிய சிறந்த பரிசாகும் இது. என் மகள் என்னை பெருமைக்குரியவளாக மாற்றியுள்ளார்” என்று பெருமைபொங்க பேசியுள்ளார் சுரேஷ்.
அவரின் பொருளாதார நிலை வலுவாக இல்லையென்றாலும், சுரேஷின் 3 குழந்தைகளுக்கும் முறையான கல்வியை அளிக்க அவர் தயங்கியதில்லை. “எனது மனைவி என்னிடம் ஒருநாளும் நகைகள் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களை கேட்டதில்லை. இன்றும்கூட, அவர் அணிந்திருப்பது தங்க நகைகள் அல்ல. ஏனெனில், எங்கள் பிள்ளைகளின் கல்விதான் எங்களுக்கு முக்கியமானதாக இருந்தது” என்கிறார் அவர்.
“நான் பத்தாம் வகுப்புவரையே படிக்க முடிந்திருந்தாலும், எனக்கு கிடைக்காதது தனது பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். எனது பிள்ளைகளின் படிப்பிற்காக நான் வங்கியில் கடன் பெற்றிருந்தேன். அந்தக் கடனை அடைப்பதற்கு என் பிள்ளைகள் எனக்கு உதவி செய்வார்கள்” என்றார்.