வருங்கால வைப்பு நிதியில் ஓராண்டில் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு கிடைக்கும் வட்டி மீது வருமான வரி விதிக்கப்படும் என்ற புதிய அறிவிப்பை மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் துறையில் வேலை பார்க்கும் ஆறு கோடி தொழிலாளர்கள், தங்கள் எதிர்கால தேவைக்காக அல்லது ஓய்வு ஊதிய பணமாக கருதப்படும் ஒரே சேமிப்பு பி.எஃப். எனப்படும் வருங்கால வைப்பு நிதி.
பணியாளர்கள் மற்றும் முதலாளிகள் என்று இருவரின் பங்களிப்பும் இந்த நிதியில் ஒவ்வொரு மாதமும் செலுத்தப்பட்டு வரும் நிலையில், ஆண்டு வாய்ப்பு நிதி ஐந்து லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால் மட்டுமே அதன் வட்டி மீது வருமான வரி விதிக்கப்படும் என்று இருந்த நிலையை, இனி ஆண்டுக்கு 2.5 லட்ச ரூபாய் என்று மாற்றியிருக்கிறது.
இந்த அறிவிப்பின் மூலம், பி.எஃப். கணக்கில் வருமான வரி வரம்புக்கு கீழ் வரும் சேமிப்பு, வருமான வரியில் இடம் பெறக்கூடிய சேமிப்பு என்று தனித்தனியாக ஒவ்வொருவரின் கணக்கும் நிர்வகிக்கப்படும் என்று தெரிகிறது.
இதுபோல், பி.எஃப். கணக்கை இரு பிரிவுகளாக பிரிப்பதற்காக மத்திய நேரடி வரிகள் வாரியம் அதாவது மத்திய நேரடி வரிகள் வாரியம், 1962 ஆம் ஆண்டின் வருமான வரி விதிகளை மாற்றி, ஒரு புதிய விதியாக 9D-ஐ அதில் சேர்த்துள்ளது.
இதன் மூலம், பி.எஃப். கணக்கில் முழுமையாக வரி விதிக்க அரசு தயாராகி வருகிறதோ என்ற சந்தேகம் தொழிலாளர்களிடையே எழுந்துள்ளது.