மும்பை:

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் ஓய்வெடுக்க தனது 5ஸ்டார் ஓட்டல்களை திறந்து, வசதி செய்து கொடுத்துள்ளது டாடா நிறுவனம்.

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து உள்ளது. மகாராஷ்டிரா, தமிழகம், கேரளா போன்ற மாநிலங்களில் நாளுக்கு நாள் அதன் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் குடிசைப்பகுதிகள் நிறைந்த தாராவி பகுதியைச் சேர்ந்த 2 பேருக்கு கொரோனா தொற்று  உறுதியான நிலையில், அந்த பகுதி சீல் வைக்கப்பட்டு, சுகாதாரத்துறை ஊழியர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதிலும், நோய் தடுப்பு  பணிகளிலும் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் ஓய்வெடுக்கும் வகையில், கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட தனது 5ஸ்டார் ஓட்டல்களை திறந்து வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளது பிரபல நிறுவனமான டாடா நிறுவனம்.

மும்பையில் உள்ள பிரபல ஓட்டல்களான பிரசிடென்ட் ஓட்டல் மற்றும் தாஜ் ஓட்டல் கொலாபா மற்றும் பந்த்ராவில் உள்ள தாஜ் லேன்ட்ஸ் ஓட்டல்களின் அறைகளை திறந்து, மருத்துவர்கள் ஓய்வெடுக்கும் வகையில் வசதி செய்து கொடுத்து உள்ளது.

இது மருத்துவர்கள் மற்றும் மாநில மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.