டில்லி

சுமார் 87 வருடங்களுக்கு முன்பு டாடா குழுமத்தால் தொடங்கப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தை மீண்டும் வாங்க அதே நிறுவனம் விரும்புகிறது.

கடந்த 1932 ஆம் ஆண்டு ஜேஆர்டி டாடா தொடங்கிய விமான சேவை நிறுவனம் அதன் பிறகு அரசுடைமை ஆக்கப்பட்டு ஏர் இந்தியா என்னும் பெயரில் இயங்கி வருகிறது.  கடந்த சில வருடங்களாக ஏர் இந்தியா கடும் நஷ்டத்தைச் சந்தித்து வருகிறது.   கடன் சுமைகள் அதிகரித்து வருவதால் இந்த விமான நிறுவனத்தை நடத்துவதில் அரசுக்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அரசு இந்நிறுவனத்தின் 76% பங்குகளை விற்க முன் வந்தது.  ஆயினும் சரியான விலை கிடைக்காததால் இந்த விற்பனை நடைபெறவில்லை.   அப்போது டாடா நிறுவனம் இந்த பங்குகளை வாங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.  ஆயினும் அப்போது அரசு தெரிவித்திருந்த பல விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை டாடா குழுமம் ஒப்புக் கொள்ளாததால் இந்த விற்பனை நடைபெறவில்லை.

சமீபத்தில் அரசு ஏர் இந்தியா நிறுவனப் பங்குகள் முழுவதையும் விற்க உள்ளதாக அறிவித்தது.  தற்போது டாடா குழுமம் ஏர் ஆசியா மற்றும் விஸ்தாரா ஆகிய விமானச் சேவை நிறுவனங்களை நடத்தி வருகிறது.  எனவே மூன்றாவதாக ஏர் இந்தியா நிறுவனத்தையும் டாடா வாங்கலாம் என எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.  இது குறித்து டாடா குழுமத் தலைவர் என் சந்திரசேகரன் செய்தியாளர்களிடம் பேசி உள்ளார்.

அப்போது அவர், “நாங்கள் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க விரும்புகிறோம்.  எங்களது நிபுணர்கள் குழு இது குறித்து ஆலோசனை செய்து வருகிறது.  இது டாடா சன்ஸ் நிறுவனத்தின் முடிவு இல்லை.  விஸ்தாராவின் முடிவு ஆகும்.  ஏனெனில் மூன்றாவதாக ஒரு விமான சேவை நிறுவனத்தை இயக்குவதை விட புதிய நிறுவனத்தைப் பழைய நிறுவனத்துடன் இணைக்க விரும்புகிறோம்.  இது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை.” எனத் தெரிவித்துள்ளார்.