சென்னை; தீபாவளியையொட்டி தமிழ்நாட்டில் அரசு நடத்தும் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் ரூ.600கோடிக்கு டாஸ்மாக் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்காக, தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரூ.600 கோடிக்கு மதுபானங்கள் குவிக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் தீபாவளி நாளை மறுதினம் (20ந்தேதி) கொண்டாடப்படுகிறது. தீபாவளியை சிறப்பாக கொண்டாடும் வகையில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு போனஸ் வழங்கி உள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில், எங்கு நோக்கிலும் மக்கள் கூட்டம் காணப்படுகிறது. புத்தாடைகளி, இனிப்புகள், வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முக்கிய நரகங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இதற்கிடையில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும், தீபாவளியை மதுபானத்துடன் சிறப்பாக கொண்டாடும் வகையில், டாஸ்மாக் கடைகளில் இப்போதே கூட்டம் அலைமோதுகிறது. அதுபோல டாஸ்மாக் கடைகளும் பல பகுதிகளில் 24மணி நேரமும் இயங்கி வருகிறது.

இந்த நிலையில், நடப்பாண்டு டாஸ்மாக் கடைகளில் ரூ.600 கோடி அளவுக்கு சரக்குகள்  ஸ்டாக் வைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாகவே பண்டிகைகாலங்களில் சரக்கு விற்பனை  கோடிகணக்கில்  இருக்கும் நிலையில், கடந்த   ஆண்டு ரூ.450 கோடி வரை மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,  நடப்பாண்டு மேலும்  பல நூறு கோடிகள் மது விற்பனை செய்ய இலக்கு விற்பனை செய்யப்பட்டு  இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த  வருடம் தீபாவளிக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால், மது பிரியர்களும் மகிழ்ச்சியில் திகைத்துள்ளனர்.  இதை சாக்காக வைத்து, பண்டிகை நாட்களில் மது விற்பனையை அதிகரிக்க டாஸ்மாக் நிறுவனம் ஊழியர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள 4829 மதுக்கடைகளில் 15 நாட்களுக்கு இருப்பு வைக்க வேண்டும். எந்த சரக்கும் இல்லை என்று சொல்லாமல் வாடிக்கையாளர்கள் கேட்கும் மதுபானங்களை கொடுக்க வேண்டும். சாதாரண ரக மது வகைகள் அதிகளவில் வைத்திருக்க வேண்டும். பிராந்தி, விஸ்கி, பீர், ரம் ரகங்கள் ரூ.140 குறைந்த விலை சரக்கு அதிகளவில் இருப்பு இருக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.

டாஸ்மாக் மதுக்குடோன்கள் பொதுவாக ஞாயிற்றுக்கிழமை செயல்படாது. ஆனால் தீபாவளி பண்டிகையையொட்டி விடுமுறை நாளிலும் செயல்பட அறிவுறுத்தப்பட்டு உள்ளது. . எந்தெந்த கடைகளுக்கு மதுபானம் தேவைப்படுகிறதோ அங்கு தட்டுப்பாடு இல்லாமல் உடனுக்குடன்  சரக்கு அனுப்ப  உத்தரவிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டு தீபாவளிக்கு குறைந்த பட்சம் ரூ.600 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.