சென்னை: தமிழக கிராமப்புறங்களில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் இந்த ஆண்டுக்கு 68,569 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மாநில அரசின் நிதியில்,, முதல் தவணையாக ரூ.209.20 கோடி நிதி ஒதுக்கி  தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், கட்டப்படும் வீடுகளுக்கு  மத்திய அரசு 60% நிதியும், மாநில அரசு 40% நிதியும் வழங்குகின்றன. அதன்படி, தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், நடப்பு நிதியாண்டில் 68,569 வீடுகள் கட்டுவதற்கு, முதல் தவணையாக ரூ.209 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதற்கான அரசாணையை, ஊரக வளர்ச்சித் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டு உள்ளார்.  அதில், தமிழகத்தில் ஒரு வீட்டிற்கு, 2.83 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதில், மத்திய அர சின் பங்கு 1.11 லட்சமும் மாநில அரசின் பங்கு 1.72 லட்சம் ரூபாயும் வழங்குகின்றன. அதே நேரம், நடப்பாண்டு தமிழகத்தில், 68,569 வீடுகள் கட்டுவதற்கு, மொத்தம் 836.82 கோடி ரூபாய் செல்வாகும். தற்போது முதல் கட்டமாக, மத்திய அரசின் பங்கு ரூ.125.52 கோடி, தமிழக அரசின் பங்கு ரூ.83.68 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, தமிழக ஊரக வளர்ச்சித் துறை வெளியிட்ட அரசாணையில்,  கடந்த ஆகஸ்ட் மாதம், மத்திய ஊரக வளர்ச்சித்துறை, கிராமப்புற பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அதாவது 2029-ம் ஆண்டு வரை, கூடுதலாக 2 கோடி புதிய வீடுகள் கட்ட ஒப்புதல் அளித்தது. இதில், இந்த 2024-25ம் நிதியாண்டுக்கு தமிழகத்தில் 68,569 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, கடந்த செப்.19ம் தேதி ஊரக வளர்ச்சி இயக்குனர் அரசுக்கு எழுதிய கடிதத்தில், கடந்த 2018-ம் ஆண்டு தரவுகளில் இருந்து பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். மத்திய அரசு ஒரு வீட்டுக்கு, நிர்வாக செலவு தவிர்த்து ரூ.1.20 லட்சம் நிர்ணயித்துள்ளதாகவும், மத்திய அரசு 60 மற்றும் மாநில அரசு 40 சதவீத தொகைகள் அடிப்படையில் இந்த 68,569 வீடுகள் கட்ட வேண்டும். இதற்கு மொத்தமாக ஆகும் ரூ.836.81 கோடியில், மத்திய அரசு ரூ.502.09 கோடியை வழங்கும.மீதமுள்ள 334.72 கோடி மாநில அரசின் பங்காகும்.

இந்த நிதியில் முதல் தவணையாக, மத்திய அரசு நிர்வாக செலவையும் சேர்த்து ரூ.125.52 கோடி ஒதுக்க வேண்டும். முன்னதாக, இந்த திட்டத்தில் கடந்த ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட வீடுகள் ரத்து செய்யப்பட்டதால், மத்திய அரசின் பங்கான ரூ.314.13 கோடி மற்றும் மாநில அரசின் பங்கு ரூ.209.52 கோடி என ரூ.523.65 கோடி தமிழக அரசின் பொது கணக்கில் உள்ளது. மேலும், தமிழக அரசின் பங்காக இந்தாண்டுக்கு ரூ.83.68 கோடி ஒதுக்கப்பட வேண்டும்.

இந்த தொகையை, தற்போது அரசின் பொது கணக்கில் உள்ள ரூ.209.52 கோடியில் இருந்து சரிக்கட்டலாம். எனவே, மத்திய அரசின் பங்கான ரூ.314.13 கோடியில் இருந்து ரூ.125.52 கோடி மற்றும் மாநில அரசின் 209.52 கோடியில் இருந்து ரூ.83.68 கோடி என ரூ.209.52 கோடி நிதியை விடுவிக்க ஒப்புதல் அளிக்கும்படியும் கோரினார்.இதை கவனமாக பரிசீலித்த தமிழக அரசு, ரூ.209.20 கோடியை முதல் தவணையாக ஒதுக்கி உத்தரவிடுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.