நைரோபி: தான்சானியா நாட்டில் தேவாலயம் ஒன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தான்சானியா நாட்டின் மோஷி நகரில் உள்ள தேவாலயம் ஒன்றில் பிரார்த்தனை நடைபெற்றது. ஏராளமானோர் இந்த வழிபாட்டில் கலந்து கொண்டனர்.
வழிபாட்டாளர்கள் ஆசீர்வதிக்கப்பட்ட எண்ணெயால் அபிஷேகம் செய்ய விரைந்து வந்தனர். அப்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அந்த நெரிசலில் சிக்கி 20 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் 5 பேர் குழந்தைகள் என்பது தெரிய வந்துள்ளது.
காயமடைந்த பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த துயர சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள அந்நாட்டு அதிபர் ஜான் முகாபுலி, இது போன்ற பெரிய நிகழ்வுகளில் இனி கூடுதல் பாதுகாப்பு போட வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.