காவிரி விவகாரம் முழுமையாக அரசியல் மயமாகிவிட்ட சூழல். இன்னொரு புறம், மேட்டூரில் இருந்து வரும் நீர் அளவு குறைந்ததால், விரக்தியுடன் காவிரியைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் விவசாயிகள்.
இந்த நிலையில், தமிழகத்தின் உரிமையை ஓங்கி ஒலிக்கும் “தமிழ்நாட்டு ரத்தநாளம் காவேரி ஆறு…” என்ற பாடல், சமூக இணைய தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
திரைப்படங்கள் பலவற்றில் இணை இயக்குநராக பணிபுரிந்த ஆம்பல். அ. கென்னடி எழுதிய இந்த பாடலுக்கு, ஹித்தேஷ் முருகவேள் இசையமைத்திருக்கிறார்.
உணர்ச்சிகரமாக பாடியிருக்கிறார் நடிகர் நவின் சீத்தாராமன். இவருடன் லெனின் சீத்தாராமன். ஆம்பல். அ. கென்னடி ஆகியோரின் கோரஸ் குரலும் பொருத்தமாக ஒலிக்கிறது.
இந்த பாடல் காட்சியை தயாரித்ததும் நடிகர் நவின் சீத்தாரமன்தான். ஹாலிவுட் படங்கள் சிலவற்றிலும் பணிபுரிந்துள்ள இவர், தற்போது தமிழ் மற்றும் பிற மொழிப்படங்களில் நடித்துவருகிறார்.
அவர், “தண்ணீர் என்பது அனைவருக்குமே தாய். தண்ணீர் பேதம் பார்ப்பதில்லை. ஆனால், காவிரி தங்களுக்குத்தான் சொந்தம் என்று சொல்லி, தமிழகத்தின் ஜீவாதார உரிமையை பறிக்கிறார்கள். இதை உணர்த்தும்படியாக ஒரு பாடல் காட்சியை எடுக்க வேண்டும் என்ற விருப்பத்தின் விளைவே இந்த வீடியோ” என்றார்.
பாடல் வரிகள்…
தமிழ்நாட்டு ரத்தநாளம்
காவேரி ஆறு – அத
தவறவிட்டா விவசாயம்
என்னவாகும் கூறு
ஆகச் சிறந்த தேசம் – இதில்
வாழ்வது சந்தோஷம்
ஆனா வாழ்க்கை நாசம் – மெல்ல
ஆகுது படுமோசம்
இங்க நீவேற நான்வேற இல்ல – வேணாம்
நமக்குள்ள பேதங்கள் கொள்ள
நாம பாரத அன்னைக்கி பொறந்தோம்
அத பாதிபேர் இன்னைக்கி மறந்தோம்
மேடு பள்ளங்கள்
மண்ணுல கிடக்கட்டும்
ஓடும் வெள்ளங்கள்
அணைகள கடக்கட்டும்
ஆகச் சிறந்த தேசம் – இதில்
வாழ்வது சந்தோஷம்
ஆனா வாழ்க்கை நாசம் – மெல்ல
ஆகுது படுமோசம்
வானத்த எதிர்பாத்து
பாதி வாழ்க்கை போச்சி
வயவரப்பு செழிச்சாதான்
எங்களுக்கு மீட்சி
இலவசமா கேட்கவில்லை
இத்தனைக்கும் நாங்க
எளக்காரமா பாக்குறீங்க
எப்பவுமே நீங்க
தரை வெடிச்சிக் கெடக்குதுபார்
தாயோட பூமி
ஒருபோகம் அறுப்பறுக்க
ஒத்தவழி காமி
ஆகச் சிறந்த தேசம் – இதில்
வாழ்வது சந்தோஷம்
ஆனா வாழ்க்கை நாசம் – மெல்ல
ஆகுது படுமோசம்
உங்களுக்குக் கோபம் என்ன
உடன்பொறந்த உறுப்பா
எங்களுக்கும் கோபம் வரும்
எழுந்து நிப்போம் நெருப்பா
வருஷத்துக்கு மூனு மாசம்
கெஞ்சிக்கிட்டே இருக்க
வார்த்தைகள மதிக்காம
ஏளனமா மறுக்க
அடங்கிப்போக காரணமே
தாய் பிள்ளை என்று
அடிக்கடி ஏன் அடிதடிகள்
தேவையில்லை இன்று
ஆகச் சிறந்த தேசம் – இதில்
வாழ்வது சந்தோஷம்
ஆனா வாழ்க்கை நாசம் – மெல்ல
ஆகுது படுமோசம்
பழிக்குப் பழி தீர்வுன்னா
பகுத்தறிவு எதுக்கு
ஆத்திரம்தான் கண்ணை மூடும்
அறிவை நீ செதுக்கு
எக்கச் சக்க சேதாரம்
யாருக்கென்ன லாபம்
கரைவேட்டி வன்முறைக்கு
காட்டுகிற தூபம்
அணைக்கட்டி தேக்கி வையி
அது உன் தண்ணீரு
அண்டை நாட்டு மனுஷனாநீ
இந்தியனா கூறு
ஆகச் சிறந்த தேசம் – இதில்
வாழ்வது சந்தோஷம்
ஆனா வாழ்க்கை நாசம் – மெல்ல
ஆகுது படுமோசம்
தமிழ்மறைய தெறந்து பாத்தா
வீர தீரம் தெறிக்கும் – உங்க
வன்முறைய தெறந்து பாத்தா
மானம் ரோசம் சிரிக்கும்
அன்புகாட்டு சக உயிர்மேல்
என்பதையும் படிச்சோம்
புலியக்கூட முறத்தைக்கொண்டு
தொரத்தி நாங்க அடிச்சோம்
ஒருத்தியோட கோபம் பொங்கி
மதுரை பத்தி எரிஞ்சது
ஒன்னுகூடி தமிழன் வந்தா
ஒங்க கதை முடிஞ்சது
ஆகச் சிறந்த தேசம் – இதில்
வாழ்வது சந்தோஷம்
ஆனா வாழ்க்கை நாசம் – மெல்ல
ஆகுது படுமோசம்
பாடலின் வீடியோ:
https://www.youtube.com/watch?v=okifa5mCFTk&feature=youtu.be