சென்னை

மிழகத்தில் கடலோர மற்றும் மலைவாழ் மக்கள் நிறைந்துள்ள மாவட்டங்களில் மேலும் 3 மருத்துவக் கல்லூரிகள் திறக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது 24 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.  இவற்றில் 3250 இடங்கள் உள்ளன.  தமிழக அரசு சார்பில் மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் ஆறு மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி கோரப்பட்டது.  வரும் 2021 – 22 வருடத்தில் நாடெங்கும் 75 அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கக் கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய பொருளாதார விவகாரக் குழு அனுமதி அளித்தது.

அதில் தமிழகத்தில் உள்ள ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர், மற்றும் நாமக்கல்லில் அரசு மருத்துவமனை அமைக்கக் கோரிக்கை விடுத்ததற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.   இதையொட்டி மேலும் 3 மாவட்டங்களுக்கு அரசு மருத்துவக்கல்லூரி தேவை எனக் கோரிக்கை விடப்பட்டுள்ளது.  அத்துடன் ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகள் அமைக்கத் தமிழக அரசு ரூ.600 கோடி நிதி உதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

மருத்துவத்துறை மூத்த அதிகாரி ஒருவர், “இந்த புதிய மருத்துவக் கல்லூரிக்கான கோரிக்கையை முதல்வர் அறிவுரைப்படி அளித்துள்ளோம். அத்துடன் இந்த கல்லூரிகள் அமைக்க ஒதுக்கப்பட்ட நிலங்கள் குறித்த ஆவணங்களும் விவரங்களும் அனுப்பபட்டுள்ளன. இந்த கல்லூரிகள் திருவள்ளூர்,  நாகப்பட்டினம் மற்றும் கிருஷ்ணகிரியில் அமைக்கப்பட உள்ளன.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஏராளமான மீனவர்கள் வசித்து வருகின்றனர். கிருஷ்ணகிரியில் மலைவாழ் மக்கள் அதிகம் உள்ளனர்.  திருவள்ளூரில் நெடுஞ்சாலைகள் அதிகம் உள்ளதால் அதிக அளவில்  விபத்துக்கள் ஏற்படும். எனவே, இந்த கல்லூரிகள் அமைப்பதன் மூலம் கடலோர மாவட்டங்கள் மற்றும் மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்கள் பயனடையும்.” எனத் தெரிவித்துள்ளார்.