சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 20 நாட்களே இருக்கும் நிலையில், தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அடிப்படையில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் மதிப்பில், இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; தேர்தலுக்கான நன்னடத்தை விதிமுறைகள் கடந்த மார்ச் 10ம் தேதி அமலுக்கு வந்தன. அதுமுதல், பணம் மற்றும் இதர விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் மதுபானம் உள்ளிட்டவற்றின் பரிமாற்றம் மற்றும் போக்குவரத்து ஆகியவை தீவிர கண்காணிப்புக்குள்ளானது.

இந்தியா முழுவதும் மார்ச் 25ம் தேதி வரை, சுமார் ரூ.540 கோடி மதிப்பிலான பணம், நகை, மதுபானம் மற்றும் போதைப் பொருட்கள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றில் தமிழகத்தின் பங்கு மட்டும் ரூ.107.24 கோடி.

மொத்த தொகையில், இது கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. இப்பட்டியலில், தமிழகத்திற்கு அடுத்து இரண்டாமிடம் பெறுவது உத்திரப்பிரதேசம். அதன் பங்கு ரூ.104.53 கோடி.

ரூ.103.04 கோடியுடன் ஆந்திர மாநிலம் மூன்றாமிடத்தையும், ரூ.93.08 கோடியுடன் பஞ்சாப் மாநிலம் நான்காம் இடத்தையும் பெறுகின்றன. ஆனால், ஐந்தாமிடத்தில் வரும் கர்நாடகத்தில் கைப்பற்றப்பட்ட பணத்தின் மதிப்பு ரூ.26.53 கோடிதான்.

இப்பட்டியலில், கடைசி இடம் வகிக்கும் சிக்கிம் மாநிலத்தில் கைப்பற்றப்பட்ட பணத்தின் மதிப்பு ரூ.0.027 கோடி மட்டுமே. அதுவும், மதுபான வடிவில் கைப்பற்றப்பட்ட தொகைதான் இது.

– மதுரை மாயாண்டி