சென்னை: தமிழ்நாடு புதுச்சேரியில் 4ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும்,  வரும் 5ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மற்றும் கடலோர பகுதிகளில் வரும் 4ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்றும், நாளையும் தமிழகம், புதுவை, காரைக் கால் பகுதிகளில் லேசான மழை பெய்யும். 2, 3ம் தேதியில் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசான மழை பெய்யும். 4ம் தேதி தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யும்.

வருகிற 5ம் தேதி வாக்கில் அந்தமான் கடல்பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.