சென்னை: நிவர் புயல் கரையைக் கடப்பது தொடர்பான இந்திய வானிலை ஆய்வுத்துறையின்(ஐஎம்டி) தொடர் அறிவிப்புகள் இந்தி மொழியில் இடம்பெற்றதற்கு, தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
நிவர் புயல், தமிழகப் பிராந்தியத்தில் கரையைக் கடப்பது தொடர்பான, தொடர் எச்சரிக்கைகள், ஐஎம்டி தரப்பிலிருந்து வெளியாகின. ஆனால், அவை இந்தியில் இடம்பெற்றிருந்தன.
இதற்கு, தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்தது. அந்த அறிவிப்புகளைப் பெற்ற பலர், தங்களது எதிர்ப்பை பதிவுசெய்யும் வகையில் “இந்தி திணிப்பை நிறுத்துக” என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கினர்.
இந்தப் புயல் ஆந்திராவையும் பாதித்தது. எனவே, தமிழகம், புதுச்சேரி மற்றும் ஆந்திர மக்களுக்குப் பயன்படும் வகையில், தமிழ் மற்றும் தெலுங்கில், புயல் குறித்த அறிவிப்புகளை வெளியிடாத ஐஎம்டி, அவற்றை இந்தியில் வெளியிட்டது. இதனால், பல மக்களுக்கு அந்த அறிவிப்புகள் பயனற்று போயின.
இதனையடுத்துதான், ஐஎம்டி வெளியிட்ட இந்தி அறிவிப்புகளுக்கு எதிராக தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்துள்ளது.