சென்னை:

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் நடத்தும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்தப் போராட்டம் குறித்து பாஜக தலைவர்கள் சர்ச்சையான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து தெளிவான கருத்தை கூறாத நிலையில், பாஜகவின் மூத்த தலைவர்   இல.கணேசன் அதிர்ச்சிகரமான கருத்தை தெரிவித்திருக்கிறார். 

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ நாடு நலம்பெற வேண்டும் எனில் ஒரு மாநிலத்தை தியாகம் செய்யலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படுத்தும் எரிவாயு திட்டத்தால் தமிழகத்துக்கு நன்மை கிடைக்கும். நல்ல திட்டங்களை செயல்படுத்தும்போது எதிர்க்கட்சிகள் மக்களிடம் தவறான கருத்தை பரப்புகின்றனர்” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதனால் மக்களுக்கு எது நல்லது என தெரியாமலேயே போராட்டம் நடத்துவதாகவும்  ஒவ்வொருவரும் நாட்டிற்காக தியாகம் செய்துதான் ஆக வேண்டும். என்றும் கூறியுள்ளார்.

எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் அதை  எதிர்ப்பது எதிர்கட்சிகளின் திட்டம் என்றும் இல.கணேசன் குற்றஞ்சாட்டினார்.