சென்னை:
தமிழ்நாட்டில் வழக்கறிஞர்கள் மீது கொண்டு வந்த சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2 மாதமாக தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் போராடி வருகிறார்கள்.
கடந்த 25ந்தேதி ஐகோர்ட்டு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டன. போராட்டத்தின்போது அத்துமீறி நடந்துகொண்டதாக 5 வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது அவர்கள் ஜாமீனில் உள்ளனர்.
ஏற்கனவே இந்திய பார் கவுன்சில், போராட்டத்தில் கலந்துகொண்ட 126 தமிழ்நாடு வழக்கறிஞர்களை , வழக்கறிஞர் தொழில் செய்ய அதிரடியாக தடை விதித்தது.
இதற்கிடையில் சென்னை ஐகோர்ட்டு, வழக்கறிஞர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நீதிபதிகளுக்கும், மனுதாரரே வழக்கில் வாதாடலாம், அதை தடுக்கும் வழக்கறிஞர் மீது காவல்துறையில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கலாம் என சுற்றறிக்கை அனுப்பியது.
இதனால் மேலும் கோபமடைந்த வழக்கறிஞர்கள், போராட்டம் தொடரும் என அறிவித்தனர். மதுரையில் நடைபெற்ற வழக்கறிஞர்கள் சங்ககூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தலைவர் திருமலைக்குமார் அறிவித்தார்.
ஆகஸ் 16 முதல் 19 வரை ஐகோட்டைமுற்றுகையிடுவோம் என்றும், 19ந்தேதி ஐகோர்ட்டு நீதிபதிகள், அமைச்சர்கள் செல்லும் சாலைகளை மறித்து, அவர்களை முற்றுகையிடுவோம் என அறிவித்துள்ளனர்.
இதற்கிடையில் இன்று காலை அகில இந்திய பார்கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா-வை சந்திக்க வழக்கறிஞர்கள் குழு டெல்லி சென்றது. அவர்களை பார் கவுன்சில் தலைவரை சந்திக்க முயன்றனர். ஆனால், அவர் தமிழக வழக்கறிஞர்களை சந்திக்க மறுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போராட்டத்தை கைவிடும்வரை பேச்சு வார்த்தை கிடையாது என்று அவர் கூறியதாக தெரிகிறது.
ஏற்கனவே பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா, கூறும்போது தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் பட்டியலை தமிழக பார் கவுன்சிலிடம் கேட்டுள்ளதாகவும், பட்டியலில் எத்தனை வழக்கறிஞர்கள் இருந்தாலும் அனைவரும் சஸ்பெண்ட் செய்யப்படுவது உறுதி என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.