நாமக்கல்:
‘‘உயர்கல்வியில் இந்தியாவிலேயே தமிழகம்தான் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது’’ என்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற உயர்கல்வி கல்லூரி கட்டிடங்கள் திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து உள்ளார்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில் உயர்கல்வித் துறை சார்பில் ரூ.7 கோடியே 98 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பெரியார் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கட்டிடத்தை முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது,
சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாணவ, மாணவியர் உயர்கல்வி படிப்பதற்காக, புரட்சித் தலைவி அம்மா நல்லாசியோடு, இன்றையதினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக் கட்டடத்தை நான் திறந்து வைத்திருக்கின்றேன். கிராமங்களிலிருந்து நகர்ப்பகுதிகள் வரை ஏழை மாணவ, மாணவியர் கல்வி கற்கத் தகுதியானவர்களாக இருந்தாலும், பொருளாதார சூழ்நிலை காரணமாக உயர்கல்வி கற்க இயலாத சூழ்நிலையை மாற்றி, அவர்கள் குறைந்த கட்டணத்தில் உயர்கல்வி கற்க வேண்டுமென்ற தொலைநோக்குச் சிந்தனையோடு புரட்சித்தலைவி அம்மா தமிழ்நாடு முழுவதும் 65 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை அவர் வாழ்ந்த காலத்திலே அர்ப்பணித்துச் சென்றார்.
புரட்சித் தலைவி அம்மாவின் கொள்கையின் அடிப்படையில், அம்மாவின் அரசு தற்பொழுது மேலும், 12 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைக் வழங்கியுள்ளது.
கல்வியில் சிறக்கின்ற மாநிலம் தான் அனைத்து வளங்களும் பெறும். அங்கே அமைதி, பண்புகள் நிலவும், உயர்வு கிடைக்கும். இவ்வாறு அனைத்தும் கிடைக்கின்றபோது பொருளாதாரம் தானாக வந்து சேரும். ஆகவே, அறிவுத்திறன் மிக்க மாணவர்களை உருவாக்க எங்களுடைய அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது என்பதை இந்த நேரத்திலே சுட்டிக்காட்டி, இந்தப் பகுதி மக்கள் இந்தக் கல்லூரியை நல்ல முறையில் பயன்படுத்தி, தங்கள் குழந்தைகளை உயர்கல்வி படிக்க வைத்து, மேலும், மேலும் பல்வேறு சிறப்புகளைப் பெற வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.
தமிழக அரசின் நடவடிக்கையால் உயர் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 49 சதவிகிதமாக உயர்ந்து இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாகத் திகழ்கின்றது என்றும், கடந்த 2011–ம் ஆண்டு 34 சதவிகிதமாக இருந்த உயர்கல்வி படிக்கக்கூடியவர்கள் எண்ணிக்கை, தற்போது 49 சதவிகிதமாக உயர்ந்து இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாகத் திகழ்கின்றது.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இந்த விழாவில் அமைச்சர் டாக்டர் சரோஜா, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், அமைச்சர் செங்கோட்டையன், நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.