சென்னை: நாடெங்கிலும் மாணாக்கர் தற்கொலை விகிதம் கணிசமாக உள்ள நிலையில், மாணாக்கர் தற்கொலை எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாமிடம் வகிக்கிறது என்ற அதிர்ச்சித் தகவலை தெரிவிக்கின்றன புள்ளி விபரங்கள்.
கடந்த 2018ம் ஆண்டுதான் மாணாக்கர்கள் மிக அதிகளவில் தற்கொலை செய்துகொண்ட ஆண்டாக பதிவாகியுள்ளது. அந்த ஆண்டில் மட்டும் சுமார் 10000க்கும் அதிகமான மாணாக்கர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
இந்தப் புள்ளிவிபரம் தேசிய குற்றப்பதிவு அமைப்பால் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியிலிருந்து கடந்த 10 ஆண்டுகளினுடைய விபரங்களை அலசுகிறது. இந்த 10 ஆண்டுகளில் மொத்தம் 81758 மாணாக்கர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனராம்!
மாணாக்கர் தற்கொலையில் மராட்டியம் முதலிடமும், தமிழ்நாடு இரண்டாமிடமும், மத்தியப் பிரதேசம் மூன்றாமிடமும் வகிக்கின்றன.
இதில் 2018ம் ஆண்டுதான் முதலிடம் வகிக்கிறது. அந்த ஆண்டில் மட்டும் நாட்டில் நடந்த ஒட்டுமொத்த தற்கொலைகளின் எண்ணிக்கை 1.3 லட்சம் என்பதாக பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கையில் 8% மாணாக்கர்கள்.
தேர்வில் தோல்வி, மன அழுத்தம், குடும்பச் சூழல், போதைப் பொருள் பயன்பாடு மற்றும் பயம் உள்ளிட்ட பல காரணங்கள் மாணாக்கர்களின் தற்கொலைக்காக சுட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.