சென்னை: 2025 பிப்ரவரி மாதத்திற்குள் 3,505 மருத்துவர் காலிப் பணியிடங்கள் மற்றும், 1,271 செவிலியர்களுக்கான காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் 18,000 மருத்துவர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது 5,000-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் குற்றம் சாட்டி உள்ளது. அதனப்டி, தற்போது பணியில் உள்ள 1,000 மருத்துவர்கள் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர உள்ளதால், பற்றாக்குறை மருத்துவர்களின் எண்ணிக்கை 6,000-ஆக அதிகரிக்கக்கூடும் என்றும், இந்த ஆண்டு ஓய்வுபெறும் மருத்துவர்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும் என்றும், அரசு மருத்துவமனைகளில், கிட்டத்தட்ட 35 விழுக்காடு மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுவதன் காரணமாக, தற்போது பணியில் இருக்கின்ற மருத்துவர்களுக்கு கூடுதல் வேலைப்பளு ஏற்பட்டதன் விளைவாக, அவர்கள் சோர்வு அடைந்துள்ளதாகவும், அவசர சிசிக்சைகள் அளிப்பதில் தாமதம் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
இதைக்கொண்டு எதிர்க்கட்சிகளும் தமிழ்நாடு அரசை கடுமையாக விமர்சித்து வந்தன. மக்களின் உயிரோடு விளையாடக்கூடாது, உடனே காலி பணியிடங்களில் மருத்துவர் களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தன.
இந்த நிலையில், மருத்துவ துறையில் காலியாக உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அதன்படி, மாநில சுகாதாரத் துறை சார்பில் வரும் 2025ம் ஆண்ட பிப்ரவரி மாதத்திற்குள் 3,505 மருத்துவர் காலிப் பணியிடங்களை நிரப்பப்படும் என்றவர், மேலும் இந்த வாரம் 1,271 செவிலியர்களை நியமிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் குறித்து மருத்துவர்கள் சங்கமும், எதிர்க்கட்சிகளும் சித்தரிப்பது போல் நிலைமை மோசமாக இல்லை என்று தெரிவித்த அமைச்சர், 80% காலிப் பணியிடங்களை ஜனவரிக்குள் நிரப்பவும், பிப்ரவரி மாதத்திற்குள் பணியை முடிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது என்றார்.
மேலும், செவிலியர் பணியிடங்களுக்கான நிரப்புதலில், கோவிட்-19 இன் போது பணியாற்றிய செவிலியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றவர், புதியவர்களுக்கு விரைவில் கூடுதல் ஆட்சேர்ப்பு தேர்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன என்றும் கூறினார்.