கடலூர்: தமிழக அரசின் தாலிக்கு தங்கம் வழங்கும் திருமண உதவித் திட்டத்தின் கீழ், கடலூர் மாவட்டத்தில் 1,754 பெண்களுக்கு தலா 8 கிராம் தாலிக்கு தங்கம் என்ற வகையில் சுமார் 14 கிலோ தங்கம் வழங்கப்பட்டது. மேலும், திருமண நிதியுதவியாக ரூ.7 கோடியே 19 லட்சத்து 25 ஆயிரம் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வரின் திருமண நிதி உதவித்திட்டத்தின் மூலம் கடலூர் மாவட்டத்தில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் இதுவரை 46,659 பெண்களுக்கு திருமண நிதியுதவியும், தாலிக்கு தங்கமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று கடலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஏழை பெண்களுக்கு திருமண நிதியுதவி வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கினார். தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் கலந்துகொண்ட இந்நிகழ்வில், கடலூர், அண்ணாகிராமம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி ஒன்றியங்களை சேர்ந்த 1,754 பெண் பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியாக மொத்தம் ரூ. 7 கோடியே 19 லட்சத்து 25 ஆயிரம் வழங்கப்பட்டது. மேலும் தாலிக்கு தலா 8 கிராம் வீதம் மொத்தம் 14.032 கிலோ தங்கமும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சமூக நல அலுவலர் அன்பழகி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர்திருமாறன், வருவாய் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.