சென்னை: பொறியியல் கல்லூரிகளுக்கான பொது கலந்தாய்வு செப்டம்பர் 10ம் தேதி முதல் நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்து உள்ளார். நடப்பு கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்புகளில் தமிழ் பாடத்திட்டம் இடம்பெறும் என்றும் கூறினார்.

தமிழ்நாட்டில் ஏற்கனவே பொறியியல் கலந்தாய்வு  ஆகஸ்டு 20ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், vமத்தியஅரசு நீட் தேர்வு முடிவுகளை இதுவரை வெளியிடாத காரணத்தால்,  பொது கலந்தாய்வு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் செப்டம்பர் 7ந்தேதி நீட் தேர்வு முடிவு வெளியாகும் என தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது.

இதையடுத்து, தமிழ்நாட்டில் மீண்டும் பொறியியல் கலந்தாய்வு தொடங்கும் என இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி தெரிவித்து உள்ளார். அதன்படி,  பொது கலந்தாய்வு செப்டம்பர் 10ம் தேதி முதல் நவம்பர் 13ம் தேதி வரை 4 கட்டமாக நடைபெற உள்ளது.

செப்டம்பர் 10 முதல் 12ந்தேதி வரை முதற்கட்ட கலந்தாய்வும், செப்டம்பர் 25 முதல் 27ந்தேதி வரை இரண்டாம் கட்ட கலந்தாய்வும், அக்டோபர் 13 முதல் 15ந்தேதி வரை 3வது கட்ட கலந்தாய்வும், அக்டோபர் 29ந்தேதி முதல் 31ந்தேதி வரை 4வது கட்ட கலந்தாய்வும் நடைபெறும் என அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

மேலும், கலந்தாய்வில், அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று கூறிய அமைச்சர், நடப்பு கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்புகளில் தமிழ் பாடத்திட்டம் இடம்பெறும் என்றும் கூறினார்.