சென்னை:
தமிழக பட்ஜெட் வெற்று அறிவிப்புகளாக மட்டுமே உள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் காலை 11 மணி அளவில் பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கினார். சுமார் 2 மணி நேரம் வாசிக்கப்பட்ட உரையில் வெற்று அறிவிப்புகள் மட்டுமே உள்ளது என்று குற்றம் சாட்டினார்.
தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்:
நிதிநிலை அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 2016-17 –ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை இன்றைக்கு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையை பொறுத்தவரையில், அரசு ஊழியர்கள், ஆசிரிய பெருமக்கள், விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஆகியவை குறித்த அம்சங்கள் இடம்பெறாமல் இருப்பது மிகுந்த வேதனைக்கு உரிய ஒன்றாக இருக்கிறது.
22 ஆயிரத்து 800 கோடி ரூபாயில் 3800 மெகாவாட் தயாரிக்க கூடிய நான்கு மின் திட்டங்கள் உருவாக்குவோம் என்று கடந்த நிதி நிலை அறிக்கையில் தெரிவித்தார்கள். ஆனால் அதுபற்றி எதுவும் இந்த நிதிநிலை அறிக்ககையில் இல்லை.
மோனோ ரயில் திட்டம் கொண்டு வருவோம் என்று கடந்த நிதி நிலை அறிக்கையில் எ சொன்னார்கள். ஆனால் அதுவும் என்ன ஆனது என்று தெரியவில்லை.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பிளாக்கிலும் முதியோருக்கு “சிறப்பு தங்கும் விடுதிகள்” அமைப்போம்” என்று சொன்னார்கள். அது என்ன ஆனது என்றும் தெரியவில்லை.
சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் நாலெட்ஜ் பார்க் அமைக்கும் திட்டம் கொண்டு வருவோம் என்று சொன்னார்கள். அதுவும் என்ன ஆனது என்று தெரியவில்லை.
குறிப்பாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் கொள்ளளவை 4.20 டி.எம்.சி. அதிகரிக்க 1851 கோடி ரூபாய் செலவில் ஒரு திட்டத்தை கொண்டு வருவோம் என்று சொன்னார்கள். அதுவும் இந்த நிதி நிலை அறிக்கையில் வெளியிடப்பட வில்லை.
மொத்தத்தில் இந்த நிதி நிலை அறிக்கையை பற்றி சொல்வதென்றால், ஒரு லட்சத்து 20 ஆயிரம்கோடி ரூபாய் கூடுதல் வருமானத்தை ஐந்து வருடத்தில் உருவாக்குவோம் என்று கூறி 2011ல் ஆட்சிக்கு வந்த இதே ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி, இப்போது இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தவுடன், 2 லட்சத்து 52 ஆயிரம் கோடி கடன் இருக்கிறது என்று வெளிப்படையாக ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார்கள்.
இதைவிட வெட்கக்கேடு வேறொன்றும் இருக்க முடியாது. இந்த கடனை எப்படி சமாளிக்கப் போகிறார்கள், கடனை சரிகட்ட என்ன செய்ய போகிறார்கள் என்ற தகவல்களும், விளக்கங்களும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை. ஆகவே, இந்த நிதிநிலை அறிக்கையை பொறுத்தவரையில், ஒரு ‘வெற்று அறிக்கை’யாக வெளியிடப்பட்டு இருக்கிறதே தவிர, வேறொன்றுமில்லை என்று கூறியுள்ளார்.
தமிழக பா.ஜ. தலைவர் தமிழிசை:
பட்ஜெட்டில் முக்கியமான துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு குறைவு. உலக முதலீட்டாளர் மாநாட்டில் அறிவிக்கப்பட்ட 2 லட்சம் கோடி முதலீடு எங்கே? 23 ஆயிரம் கோடிதான் முதலீடு வந்துள்ளதாக பட்ஜெட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக நதிகள் இணைக்கும் திட்டம் பற்றி பட்ஜெட்டில் எந்த குறிப்பும் இல்லை. வருவாய் பெருக்க அரசிடம் உள்ள திட்டம் பற்றி பட்ஜெட்டில் தகவல் இல்லை.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்:
தமிழக நிதிநிலை அறிக்கை வரவேற்கத்தக்கது ஆனால் பற்றாக்குறை என்ற வலி உள்ளது என பட்ஜெட் குறித்து விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதாவது, தமிழக நிதிநிலை திருத்த பட்ஜெட்டில், பல திட்டங்களை அறிவித்திருப்பது ஒருபுறம் வரவேற்பதாக இருப்பினும், ஒருபுறம் பற்றாக்குறை பட்ஜெட்டாகவே கருத்தபடுகிறது.
தமிழ்நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்லும் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பது வேதனை அளிக்கிறது. கவர்ச்சி திட்டங்களுக்கும், இலவச திட்டங்களுக்கும் முன்னுரிமை தரப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டு ஆட்சியில் 110 விதியின் கீழ் சென்றமுறை அறிவித்த திட்டங்கள் மற்றும் பட்ஜெட்டில் அறிவித்த பல திட்டங்கள் இன்று வரை செயல்படுத்தப்படவில்லை. அதேபோல் இந்த முறையும் அறிவிப்பு அரசாக மட்டும் இல்லாமல், செயல்படுத்தும் அரசாக இருக்க வேண்டும். “ஏட்டுச்சுரக்காய் கூட்டுக்கு உதவாது” அதுபோல் இந்த திட்டங்கள் ஏட்டளவில் மட்டும் இல்லாமல், செயல் அளவில் இருக்க வேண்டும். வரி இல்லாத பட்ஜெட் என்று பெருமை பேசினாலும், பற்றாக்குறை என்ற வலியுள்ள பட்ஜெட்டாகவே கருதப்படுகிறது என்று கூறியுள்ளார்.