சென்னை: தமிழகத்தில் உள்ள திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் மக்களைப் பற்றிய அக்கறை இல்லை’ என உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்து உள்ளது.
இரு கட்சிகளுக்கும் தங்கள்மீதுதான் அக்கறையே தவிர, மக்கள்மீது அக்கறை இல்லை என முன்னாள் அதிமுக அமைச்சர் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
அதிமுக அலுவலகத்தில் அதிமுக அரசு உதவியுடன் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், புகுந்து ஆவணங்களை எடுத்துச்சென்ற விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அதிமுக தரப்பில், அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுமீதான விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில்,. கடந்த இரு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
இதையடுத்து, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில், சி.வி.சண்முகம் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுமீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, காவல் துறை தரப்பில், ஆஜரான வழக்கறிஞர், “இந்த வழக்கு தொடர்பாக 114 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. அந்த ஆவணங்களின் நகல்கள் மனுதாரருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 300-க்கும் மேற்பட்டோர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டுள்ள னர்.
மேலும், இந்த வழக்கில், ஏற்கெனவே 100 பேருக்கு மேல் முன்ஜாமீன் பெற்று உள்ளனர். புலன் விசாரணை முன்னேற்ற கதியில் நடந்து வருகிறது. விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்,” என்று தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “தமிழகத்தில் இரண்டு கட்சிகளுக்கும், மக்களைப் பற்றி அக்கறை இல்லை. அவர்களுடைய சொந்தக் கட்சியை பற்றி மட்டும்தான் அக்கறை இருக்கிறது. உங்கள் வழக்குகளை மட்டும் விசாரித்தால் போதுமா? வேறு வழக்குகள் இல்லையா?” என நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார்
மேலும், “எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதே காவல் துறையினர்தான் பணியில் இருக்கிறார்கள். தேவையில்லாமல் காவல் துறையினர் மீது குற்றம்சாட்டப்படுகின்ற னர்” என்று நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.
அத்துடன், “இந்த வழக்கை பொறுத்தவரை சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால், சிபிசிஐடி போலீசார் விரைந்து விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும்,” என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.