சென்னை: அரசியல் கட்சியை தொடங்கி உள்ள நடிகர் விஜய், தனது தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் கொடியை இன்று அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து தனது கட்சி அலுவலகத்தில் கட்சிக்கொடியை ஏற்றினார்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி கூறுகின்றன்.” என்று உறுதிமொழியேற்ற பின்னர் தனது கட்சிக் கொடியை ஏற்றி அறிமுகம் செய்து வைத்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியானது சிவப்பு, மஞ்சள் பின்னணியில் இரண்டு போர் யானைகள் கொண்டும் நடுவில் வாகைமலர் கொண்ட லோகோவை கொண்டுள்ளது.
2026ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள நடிகர் விஜய் அதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே கட்சியின் பெயர் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட நிலையில், கட்சி குறித்து தனது ரசிகர்கள் மூலம் மக்களிடையே பிரபலப்படுத்தி வருகிறார். அதன் தொடர்ச்சியாக, தமிழக வெற்றிக்கழகத்தின் முதன் அரசியல் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை திருச்சியில் நடத்த விஜய் திட்டமிட்டிருந்த நிலையில், அதற்கு அனுமதி கிடைக்காத நிலையில், தற்போது விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது.
இநத் மாநாடு செப்டம்பர் மாதம் விக்கிரவாண்டியில் நடக்க இருக்கிறது. அப்போது கட்சியின் கொள்கை, சின்னம் குறித்து முக்கிய அறிவிப்புகளை விஜய் வெளியிட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், இன்று தனது கட்சி் தொண்டர்கள் மத்தியில் தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சிக்கொடியை நடிகர் விஜய் அறிமுகம் செய்தார். முன்னதாக, கடந்த திங்கட்கிழமை (20ந்தேதி) பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் 45 அடி உயர கொடிக்கம்பம் நிறுவப்பட்டது. அதைத்தொடர்ந்து கட்சி கொடி போன்ற ஒரு மஞ்சள் நிற கொடியை ஏற்றி ஒத்திகை பார்த்தார். அதைத்தொடர்ந்து, இன்று (ஆகஸ்டு 22ந்தேதி) கட்சிக்கொடி அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இன்று காலை 9மணி அளவில் கட்சி அலுவலகம் வந்த நடிகர் விஜய் காலை 9.15மணி அளவில், அங்கு நடப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் மஞ்சள் நிறத்துடன் தனது உருவம் பொறிக்கப்பட்ட கொடியை ஏற்றினார். இந்த நிகழ்ச்சியின்போது தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டத் தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள், முக்கிய பொறுப்பாளர்கள், தொண்டரணி, மாணவரணி, மகளிர் அணி, இளைஞரணி, வழக்கறிஞர் அணி உள்ளிட்ட அணி தலைவர்கள் என 300 பேர் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.
முன்னதாக கொடி அறிமுக நிகழ்ச்சியில் நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றனர். விஜய் உறுதிமொழியை கூற நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டனர். அதாவது, “நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன்.
நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன். மதச்சார்பின்மை, சமூக நீதிப் பாதையில் பயணித்து, என்றும் மக்கள் மக்களாட்சி, நலச் சேவகராகக் கடமை ஆற்றுவேன் என உறுதி அளிக்கின்றேன்.
சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி கூறுகின்றன்.” என்று உறுதிமொழியேற்றனர்.
இதைத்தொடர்ந்து, கட்சியை பிரபலப்படுத்தும் வகையில் பிரசார பாடல் அடங்கிய குறுந்தகடு வெளியிடப்பட்டது.