அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக பல கோடி ரூபாய் வசூல் செய்து மோசடி செய்யப்பட்டதாக தகவல் பரவியுள்ளது.
புகழ்பெற்ற அமெரிக்கா ஹார்வர்டு பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்படுவதாகவும் அதற்கு 33 கோடி ரூபாய் பணம் செலுத்தவேண்டும் என்றும் அமெரிக்க தமிழர் அமைப்பு ஒன்று அறிவித்தது. தமிழ் ஆர்வலர்கள் பலரும் சில ஆயிரம் முதல் லட்சக்கணக்கான ரூபாய் நிதி அளித்தனர்.
தமிழக அரசின் சார்பில் ரூ.9.75 கோடி செலுத்தவும் தமிழக அரசு அனுமதி அளித்தது. மேலும், ழ என்ற அமைப்பு சார்பில் தமிழ் இருக்கைகளுக்காக ரூ.19 கோடியை செலுத்தவும் தமிழக முதல்வர் பழனிசாமி நடவடிக்கை எடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஹார்வர்டு தமிழ் இருக்கை என்று மோசடி செய்து பணத்தை ஏமாற்றுவதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இது குறித்து தமிழ் ஆர்வலரும் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான பிஸ்மி பரிணாமன் தனது முகநூல் பக்கத்தில், இதை உறுதிப்படுத்தும்படியாக பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவு:
“ஹார்வட் பல்கலை கழகத்தில் ‘தமிழ் இருக்கை குறித்து பல நியாயமான சந்தேகங்களை கேட்டு மின் அஞ்சல் அனுப்பி ஒன்றரை மாதம் ஆகிவிட்டது. இது வரை பதில் வரவில்லை. ஹார்வட் தமிழ் இருக்கைக்காக செயல்படும் அமெரிக்க அமைப்பும் எனது கேள்விகளுக்கு ஒரு ஆண்டு ஆகியும் பதில் அனுப்பவில்லை. வலைத்தளத்திலும் தமிழகத்திலும் ஹார்வட் தமிழ் இருக்கை தொடர்பாக பல களேபரங்கள் நடந்து வருகின்றன. பலர் உண்மை தெரியாமல் (?) பல லட்சங்கள் நிதி வழங்கியுள்ளார்கள். தமிழக அரசும் லட்சக்கணக்கில் நிதி வழங்கியுள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர் சிவ அய்யாதுரை “HARWARD TAMIL SCAM ‘ என்ற பதிவை வலைதளத்தில் இட்டுள்ளார். அதை அனைவரின் கவனத்திற்காக பதிவிடுகிறேன். எனக்கு ஹார்வட் பல்கலை கழகம் குறித்து நல்ல அபிப்பிராயம் இல்லை. அதன் செயல்பாடுகள் குறித்து பல பதிவுகள் இட்டுள்ளேன். ஹார்வட் தமிழ் இருக்கை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்கா வாழ் டாக்டர் ஜானகிராமன், கனடா வாழ் இலங்கை தமிழர் முத்துலிங்கம் Harvard University Tamil Chair குறித்து உண்மை நிலமையையும், டாக்டர் சிவா அய்யாதுரை பதிவினைப் பற்றியும் விளக்குவார்களா..? விளக்கியே ஆக வேண்டும்” என்று பிஸ்மி பரிணாமன் பதிவிட்டுள்ளார்.
தமிழின் பெயரால் மோசடி நடந்திருப்பதாக செய்தி பரவியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.