சென்னை: தமிழ்நாட்டின் மொத்தக் கடன் ரூ.9 லட்சம் கோடி என தெரிவித்துள்ள நிதித் துறை செயலர் உதயச்சந்திரன் கடன் வரம்புக்குள் உள்ளது என்று கூறினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (மார்ச் 14ந்தேதி) தொடங்கிய நிலையில், 2025-26ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
நடப்பு நிதியாண்டில், நாட்டிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாகவும், ரூ.1.1 லட்சம் கோடி திறந்தவெளி சந்தையில் தமிழ்நாடு அரசு கடன் வாங்கி இருப்பதாகவும், நாடாளுமன்றத்தில் மத்தியஅரசு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்ஜெட்டில் மத்திய அரசின் பங்கு வரி வருவாய் குறைந்து கொண்டே வருகிறது. பேரிடர் நிவாரண நிதி, கல்வி நிதியை மத்தியஅரசு மறுப்பதால் மாநில அரசின் நிதிநிலை பாதிக்கப்பட்டு உள்ளது. மொத்த மக்கள்தொகையில் 6 சதவீதம் கொண்டுள்ள நாம் வரியை அளிப்பதில் 9 சதவீதமாக உள்ளோம். மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் வரி வருவாய் பங்கு 1.96 சதவீதமாக குறைந்துள்ளது என கூறிய நிதி அமைச்சர், 2025-26-ம் நிதியாண்டுக்கு 2.20 லட்சம் கோடி ரூபாயாக வரி வருவாய் மதிப்பிடப்பட்டுள்ளது என்றார்.
அரசின் பெரும் முயற்சியால் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் உயர்ந்துள்ளது என கூறிய அமைச்சர், 2025-26-ம் நிதியாண்டில் மாநிலத்தில் சொந்த வரி வருவாய் 14.6 சதவீதம் வளர்ச்சி பெறும் என மதிப்பிடப்பட்டு இருப்பதாகவிம், வரும் நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை மேலும் குறையும் என்று கூறியவர், வரும் மூலதன பணிகளுக்காக ரூ.57,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், வரும் நிதியாண்டில் மாநில வரி வருவாய் 2 லட்சத்து 20 ஆயிரம் கோடியாக இருக்கும் என்றும், வரியல்லாத வருவாய் ரூ.28,219 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
கடந்த 2024-25 நிதியாண்டில் வரவு, செலவு திட்ட மதிப்பீட்டில் மாநிலத்தின் சொந்த வருவாய் ரூ.1,95,173 கோடி என்பதை சுட்டிக்காட்டியவர், வரும் நிதியாண்டில், அது 2.20 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்று தெரிவித்தார்-
பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு அரசின் நிதித் துறை செயலர் உதயச்சந்திரன், தமிழ்நாட்டின் மொத்தக் கடன் ரூ.9 லட்சம் கோடி என்றும் நடப்பு ஆண்டு 1 லட்சத்து 5 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.‘ மேலும், மாநில அரசின் கடன் வாங்கும் வரம்புக்குள்தான் தமிழக அரசின் கடன் உள்ளது என்று உதயச்சந்திரன் கூறினார்.
நடப்பு ஆண்டு மேலும், 1 லட்சத்து 5 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும்,
“தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.41,000 கோடியாகக் குறையும். மாநில அரசின் கடன் வாங்கும் வரம்புக்குள்தான் தமிழக அரசின் கடன் உள்ளது. மத்திய அரசிடமிருந்து பல திட்டங்களுக்கான நிதி வந்திருந்தால் இது மேலும் குறைந்திருக்கும். ஜி.எஸ்.டி-யை பொருத்தவரை டிஜிட்டல் சேவையில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். நிறைய கட்டமைப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன”
இவ்வாறு கூறினார்.