கோவை: கடுமையான நிலச்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவின் வயநாடு பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மீட்புபணிகளில் தமிழக குழுவினரும் இணைந்துள்ள நிலையில், வயநாடு மக்களுக்கு தேவையான உணவு மற்றும் மருந்துகளுடன் தமிழ்நாட்டில் இருந்து நிவாரண பொருள்அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் பெய்த தொடர் கனமழையால் குரல்மலை, முண்டக்கை உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு பலர் சிக்கிக்கொண்டனர். இந்த விபத்தில் தற்போது வரை 163 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  பெய்து வரும் மற்றும் மற்றும்  வெள்ளத்தில் வீடுகள் பல சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணி இரவு பகலாக  தொடர்ந்து நடந்து வருகிறது.

மீட்புப் பணியில்  ராணுவம், போலீசார், தீயணைப்பு படையினர், வனத் துறையினர் மற்றும் தேசிய பாதுகாப்பு மீட்புப் படை (NDRF) வீரர்கள் உள்ளிட்ட பலர் ஈடுபட்டு வருகின்றனர்.  தமிழ்நாடு அரசின் சார்பில்  ரூ.5 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளதுடன், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் மீட்பு குழுவினரும்  வயநாடு சென்றனர்.  அங்கு கேரள மாநில அரசுடன் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக,  வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் குழு மற்றும் மருத்துவ குழுவினர் மீட்பு மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணிகளில் ஈடுபட உள்ளனர்.  இந்த நிலையில் கேரளாவிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிவாரண பொருட்கள் மற்றும் மீட்பு பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டிலிருந்து அனைத்து வகையிலும் உதவி செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

அதன்படி,  கோவையிலிருந்து மீட்புப் பணிகளுக்கு பயன்படுத்தும் வகையில் 5 பொக்லைன் வாகனங்கள் மற்றும் இறந்தவர்களின் உடல்களைப் பதப்படுத்தி வைக்கும் பிரீசர் பாக்ஸ்கள் (freezer box) பத்து  மற்றும் நிவாரண பொருட்கள் முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டன.   கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலக வளாகத்தில் இருந்து மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் மற்றும் அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு பொருட்கள், மருந்துகள்  மேப்பாடி நிவாரண முகாமில் சேமித்து வைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.