மதுரை: தமிழ்நாட்டில் ஊழலில் மிதக்கும் துறை பதிவுத்துறை என்று சென்னை உயர்நீதி மன்றம் காட்டமாக கூறியுள்ளது. பதவி இறக்கம் செய்யப்பட்ட சார்பதிவாளர் ஒருவர், தனது டி-புரோமஷனை ரத்து செய்யக் கோரி தொடர்ந்த வழக்கில் பதிவுத்துறையை கடுமையாக விமர்சித்த நீதிபதிகள், வழக்கு தொடர்ந்த அதிகாரியின் சொத்துகளை ஆய்வு செய்ய அதிரடி உத்தரவிட்டுள்ளது.
பட்டுக்கோட்டையில் உதவி சார்பதிவாளராக பணிபுரிந்தவர் சந்திரசேகரன். இவர் 2022ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி பணி ஓய்வுபெற உள்ளார். முன்னதாக இவர்மீதான புகார்கள் காரணமாக, பதவி இறக்கம் செய்யப்பட்டு மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக நியமிக்கப்பட்டார்.
தனது பதவி இறக்கத்தை எதிர்த்து சந்திரசேகரன் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுமீதான விசாரணை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் முன்பு நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பொது ஊழியரான ஒருவர் தனக்கான பதவியையோ, பணி இடத்தையோ அவரது விருப்பத்தின்படி கேட்க முடியாது. பொது ஊழியரின் பணி என்பது பொதுமக்களின் நலனுக்கானது. பொது ஊழியர் ஒருவர் குறிப்பிட்ட காரணத்துக்காக, குறிப்பிட்ட பணியில் பணியாற்ற விரும்பும்போது அங்கு தேவையில்லாத தலையீடுகள் இருக்கும்.
பதிவுத் துறையில் ஏற்கெனவே ஊழல்கள் மலிந்துள்ளன. ஊழலில் மிதக்கும் பதிவுத்துறையில், விதிப்படி ஓய்வு பெறுவதற்கு 6 மாதம் வரை இருக்கும்போது ஒருவர் முக்கியத்துவம் வாய்ந்த பணியில் இருக்க முடியாது. அதனால், மனுதாரர் குறிப்பிட்ட பணியிடத்தை கேட்பதை உரிமையாக கருதமுடியாது.
பொது ஊழியர் என்பவர் நேர்மையாகவும், கடமை உணர்வுடனும் பணியாற்ற வேண்டும். மனுதாரரின் கோரிக்கை அவர் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே, மனுதாரரின் பணிப் பதிவேடு தொடர்பான ஆவணங்களையும் அவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்துகள் குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும். முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டால் மனுதாரர் மீது பணி விதிப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கையை பதிவுத் துறை ஐஜி 4 வாரங்களில் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.