டெல்லி: தமிழ்நாட்டுக்கு கடந்த கால காங்கிரஸ் ஆட்சியை விட 9 மடங்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பட்டியலிட்டு விளக்கம் அளித்தார்.
மேலும் பல திட்டங்களுக்கு திமுக அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

கடந்த பிப்ரவரி 1ம் தேதி அன்று வரும் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு, புதுவை உள்ளிட்ட தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களை குஷிப்படுத்தும் விதமாக அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அந்த வகையில், ஒருசில திட்டங்கள் இடம்பெற்றிருந்தாலும் அது போதுமானதாக இல்லை எனவும், தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் உள்பட திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இந்த நிலையில், இந்த விமர்சனங்களுக்கு பதில் தரும் விதமாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ், தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ள நிதி மற்றும் திட்டங்கள் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் கூறுகையில், 2026-27-ல் மத்திய பட்ஜெட்டில் ரயில்வேத் துறைக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் ரூ.7,611 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2009 முதல் 2014 வரையிலான காலத்தில் ஒதுக்கப்பட்ட ஆண்டு சராசரி ரூ.879 கோடி என்பதை விட இது 9 மடங்கு அதிகமாகும்.
ரயில் நிலையங்கள் புணரமைப்பு பணிகளானது ரூ.35,701 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை புதிய பாதைகள் அமைத்தல், ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு, மாநிலம் முழுவதும் பாதுகாப்பை விரிவுபடுத்துதல் ஆகியவற்றுக்கு இந்த முதலீடு பயன்படுத்தப்படும்.
பயணிகளின் அனுபவத்தை மறுவரையறை செய்யும் வகையில், தமிழ்நாட்டில் அம்ரித் பாரத் நிலைய திட்டத்தின் கீழ், மறுசீரமைப்பு செய்ய 77 ரயில் நிலையங்கள் அடையாளம் காணப்பட்டு பலவற்றுக்கான பணிகள் நிறைவடைந்துள்ளன. 2-ம் கட்டத்தில் பொள்ளாச்சி சந்திப்பு ரயில் நிலையப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் 9 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களும், 9 அமிர்த பாரத எக்ஸ்பிரஸ் ரயில்களும் தற்போது இயக்கப்படுகின்றன.
2014-க்குப் பின் சுமார் 1,350 கி.மீ ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 2,386 கி.மீ தூரத்திற்கான ரயில் பாதையில் 97 சதவீதம் மின்மயமாக்கப்பட்டுள்ளது. 769 மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.
அத்திப்பட்டு – புத்தூர் 88 கிலோ மீட்டர் நீள புதிய ரயில் பாதை திட்டத்துக்கு 189 ஹெக்டேர் நிலம் தேவைப்படும் நிலையில், நிலம் எதுவும் இதுவரை கையகப்படுத்தவில்லை. இதேபோல, மன்னார்குடி – பட்டுக்கோட்டை 41 கிலோ மீட்டர் நீள புதிய ரயில் பாதை திட்டத்துக்கும், தஞ்சை – பட்டுக்கோட்டை 52 கிலோ மீட்டர் நீள புதிய ரயில் பாதை திட்டத்துக்கும் நிலம் கையகப்படுத்தப்படவில்லை. இது போன்ற ரயில்வே திட்டத்துக்கு மாநில அரசு நிலம் கையகப்படுத்தல் போன்ற பணிகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆதரவு தர வேண்டும்” என்றார்.
[youtube-feed feed=1]