விழுப்புரம்:

வதூறு வழக்கில் எஸ்.வி.சேகரை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்ட நிலையில், எஸ்.வி.சேகர் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுடன் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. தமிழக காவல்துறை வேண்டுமென்றே அவரை கைது செய்வதை தவிர்த்து வருவதாக தமிழக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.  மேலும், தமிழக செய்தியாளர்களும் தமிழக காவல்துறையின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து விழுப்புரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எஸ்வி சேகரை பார்த்தேன்… பேசினேன்… என்று கூலாக சொன்னார்.

எஸ்.வி.சேகரை கைது செய்து விசாரிக்க சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளதே என்று கேட்டதற்கு, அதை தமிழக அரசுதான் செய்ய வேண்டும், தமிழக போலீசார்தான் எஸ்.வி.சேகரை கைது செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

ரஜினியுடன் கூட்டணி சேருமா பாரதிய ஜனதா என்ற கேள்விக்கு,அது குறித்து தேர்தல் நேரத்தில் தெரிய வரும் என்றார்.

கர்நாடக தேர்தல் குறித்த கேள்விக்கு,  கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைந்தால்தான்,  தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் கிடைக்கும் என்றார்.

பெண் பத்திரிக்கையாளர் குறித்து அவதூறாக முகநூலில் பதிவிட்ட நகைச்சுவை நடிகரும்,தமிழக பாஜக நிர்வாகியான எஸ்வி சேகர் கடந்த 4 வாரங்களாக தலைமறைவாக  இருப்பதாக ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. ஆனால், அவர் கோவில் குளம் என்று சுற்றி வருகிறார். காவலர்கள் பாதுகாப்பில் உள்ள ஒரு மத்திய அமைச்சரை சந்தித்து பேசி வருகிறார்… தமிழக அமைச்சர் ஜெயக்குமாரோ, காவல்துறை கடமையை செய்யும் என்று வருகிறார்… ஆனால், அவரை கைது செய்ய தமிழக காவல்துறை எந்தவித முயற்சியும் மேற்கொள்ளாமல் உள்ளது.

இது தமிழக ஊடகத்துறையினர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.