சென்னை: திமுக அரசு மீதான அதிருப்தி தெரிவிப்பவர்களை பாய்ந்து சென்று கைது செய்து வரும் காவல்துறையினர், ஏற்கனவே செருப்பு வீசிய பாட்டியை தேடி வரும் நிலையில், சமீபத்தில் விழுப்புரத்தில் அமைச்சர் மீது சேறு வீசப்பட்ட விவகாரத்தில், சேறு வீசியவர்களை வீடு வீடாக தேடி அலையும் அவல நிலையில் தமிழ்நாடு காவல்துறை செயலாற்றி வருகிறது.
இதற்கு அதிமுக, பாஜக, பாமக உள்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். காவல்துறையினரின் நடவடிக்கைக்கு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. ஒரு பெண்ணை கைது செய்வதற்கு விழுப்புரத்தில் பெண் போலீஸ் இல்லையா.?? என கேள்வி எழுப்பட்டு வருவதுடன், காவல்துறையினரின் மனிதாபிமானமற்ற செயல் கடுமையாக விமர்சிக்கப்பட்டுவருகிறது.
ஃபெஞ்சல் புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம் மாவட்டத்தின் இருவேல்பட்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கு எந்தவித நிவாரண உதவிகளும் வழங்கவில்லை எனக் கூறி, திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 2024ம் ஆண்டு டிச. 03ந்தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் முன்னாள் எம்.பியுமான கவுதம சிகாமணி ஆகியோர் மீது போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் சேற்றை வாரி வீசினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அமைச்சர் பொன்முடி, அந்த இடத்திலிருந்து வெளியேறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏற்கனவே முதலமைச்சர் ஸ்டாலின், பொங்கல் பரிசு தொகுப்பில் பணம் வழங்ககாத நிலையில், அவரது போஸ்டரில் மூதாட்டி ஒருவர் செருப்பை வீசி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதுகுறித்து அந்த பகுதி எம்எல்ஏ கொடுத்த புகாரின் பேரில், அந்த மூதாட்டியை காவல்துறையினர் தேடி வரும் நிலையில், அந்த புகைப்படத்தை பதிவிட்ட நபரை காவல்துறையினர் கைது செய்து. இது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தற்போது அமைச்சர் மீது சேறு வீசியர்களை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், சாதிய வன்மத்தால் அமைச்சர் மீது சேற்றை வீசியதாக குற்றம் சாட்டப்பட்டு இருவேல்பட்டு ஊரைச் சார்ந்த மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தது காவல்துறை. இது கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இதனை பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கண்டித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மெட்ரோ தூணில் ஒட்டப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின் போஸ்டர் மீது செருப்பால் அடித்த வயதான தாயார் ஒருவரைத் தேடி அலைந்தார்கள். தற்போது, அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய பொதுமக்களைத் தேடி அலைகிறார்கள். திமுக ஆட்சி நடக்கும் லட்சணத்திற்கு, இனி இதுவே முழு நேர வேலையாக இருக்கும் எனத் தெரிகிறது.
கடந்த டிசம்பர் மாதம் விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டு கிராமத்தில், ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளைப் பார்வையிடச் சென்ற அமைச்சர் பொன்முடி, காரில் இருந்து இறங்காமல், பாதிப்பு குறித்து விசாரித்ததால், அவர் மீது சேறு வீசப்பட்டிருக்கிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், தங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்காததால் ஏற்பட்ட ஆதங்கத்தாலும், இயலாமையினாலும் நடைபெற்ற நிகழ்வே தவிர, தனிப்பட்ட காரணங்களுக்காக அல்ல. இதனைப் பெருந்தன்மையாக விட்டு விடுவதாக அமைச்சர் பொன்முடி அப்போது கூறிவிட்டு, தற்போது, அந்தக் கிராம மக்கள் மீது காவல்துறையை ஏவி விட்டு வெறியாட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். விசாரணை என்ற பெயரில், கிராம மக்களைக் காவல் நிலையம் அழைத்துத் துன்புறுத்துவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்திய பெண்கள் உட்பட அனைவரையும் பலவந்தமாகக் கைது செய்திருக்கிறார்கள். காவல்துறை ஆய்வாளர் ஒருவர், ஒரு சகோதரியின் கைகளைப் பிடித்து இழுக்கும் காணொளியைக் காண நேர்ந்தது.
இது பெண்களைக் கைது செய்யும்போது, மகளிர் காவலர்கள் இருக்க வேண்டும் என்ற அடிப்படை வரைமுறையை முற்றிலும் மீறியிருப்பதாகும். புயல் பாதிப்பினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்கள், இன்னும் முழுமையாக மீண்டெழவில்லை. திமுக அரசு புயல் பாதிப்புகளைச் சரியாகக் கணிக்கத் தவறியதோடு, மிகவும் மெத்தனப் போக்கில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டதைத் தமிழக மக்கள் அறிவார்கள்.
நான்கு பேரை வைத்து சினிமா ஷூட்டிங் நடத்தி, நல்லாட்சி நடக்கிறது என்று தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சர்களுக்கு, பொதுமக்களிடையே இருக்கும் எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாமல், பொதுமக்கள் மீது அதிகார வன்முறையைப் பிரயோகிக்கிறார்கள். முதலமைச்சர் ஸ்டாலின், தங்கள் ஆட்சியின் அவலத்தைச் சரி செய்யாமல், அப்பாவி பொதுமக்களைத் துரத்துவது ஏன்? திமுக அரசு, இந்த உளுத்துப் போன காரணங்களைச் சொல்லி பொதுமக்களைப் பழிவாங்குவதை நிறுத்தி விட்டு, ஃபெஞ்சல் புயல் நிவாரணப் பணிகள், பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் கிடைத்திருக்கிறதா என்பதை உறுதி செய்யும் பணிகளில் உடனடியாக கவனத்தைச் செலுத்த வேண்டும் என்றும், இருவேல்பட்டு கிராம மக்கள் மீதான நடவடிக்கைகளை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார்.
இதுகுறித்து பாமக தவைலவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரம் மாவட்டம் அரசூர் கூட்டு சாலை என்ற இடத்தில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், காவல்துறையினரின் அத்துமீறலைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் இருவேல்பட்டு கிராம மக்கள் மீது காவல்துறையினர் கடுமையாக அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை ஆண் காவலர்கள் அவமானப்படுத்தும் வகையில் இழுத்துச் சென்று அப்புறப்படுத்தியுள்ளனர். வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த அப்பாவி இளைஞர்களையும் காவல்துறையினர் தீவிரவாதிகளைப் போல இழுத்துக் கொண்டு சென்றுள்ளனர்.
காவல்துறையின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது. உண்மையில் சாலைமறியல் செய்தவர்களை அகற்ற வேண்டும் என்பது காவல்துறையின் நோக்கம் இல்லை. மாறாக, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், கடந்த சில வாரங்களுக்கு முன் அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்ட கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களை பழிவாங்க வேண்டும்; தண்டிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் இந்த அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
மக்கள் மீது ஆட்சியாளர்கள் கொண்டுள்ள வன்மத்தின் வெளிப்பாடு தான் இந்த தாக்குதலும், அவமதிப்பும் ஆகும். நவம்பர் -திசம்பர் மாதங்களில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட இருவேல்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கு உதவிகள் வழங்கப்படவில்லை என்று கூறி கடந்த திசம்பர் 3-ஆம் தேதி சாலைமறியல் போராட்டம் நடத்தினார்கள். அவர்களுடன் பேச்சு நடத்தச் சென்ற அமைச்சர் பொன்முடி மற்றும் அதிகாரிகள் மீது சேறு வீசப்பட்டது. அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத்தேவையில்லை என்று அமைச்சர் பொன்முடி அப்போதே கூறியிருந்தாலும் கூட அதிகாரிகள் பெயரில் புகார் அளிக்கப்பட்டு வழக்குத் தொடரப்பட்டு உள்ளது.
அதனடிப்படையில் அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியவர்களை கைது செய்ய காவல்துறையினர் முயன்றதாகவும், அதற்காக அந்த ஊர் மக்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அதைக் கண்டித்து தான் மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்டதை நியாயப்படுத்தவே முடியாது. ஆனால், தங்களை நியாயவாதிகள் என்று காட்டிக் கொள்வதற்காக, அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று வெளியில் அறிவித்து விட்டு, அதிகாரிகளின் பெயரில் புகார் கொடுத்து அவர்களை கைது செய்ய முயன்றதும், அதற்காக அந்த ஊர் மக்களுக்கு தொல்லை தரப்பட்டதும் தான் பிரச்சினைகளுக்கு காரணம் ஆகும். சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்துவதில் கூட தவறு இல்லை. ஆனால், கலைந்து சென்ற மக்களை பயங்கரவாதிகளைப் பிடிப்பதைப் போல காவல்துறையினர் வேட்டையாடியதை மன்னிக்க முடியாது.
திமுகவை ஆட்சியில் அமர்த்தியவர்கள் மக்கள் தான். அவர்கள் தங்களுக்கான நீதியைக் கேட்டு போராடும் போது அமைச்சர் அவமதிக்கப்பட்டார் என்பதற்காக பல வாரங்கள் கழித்து அவர்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுகிறது என்றால் ஆட்சியாளர்களின் மனதில் பழிவாங்கும் உணர்வு எந்த அளவுக்கு ஊறியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். இத்தகைய நிகழ்வுகளைப் பார்க்கும் போது தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியா, போலீஸ் ஆட்சியா? என்ற ஐயம் தான் எழுகிறது.
இவற்றுக்கெல்லாம் மக்கள் பாடம் புகட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று தெரிவித்துள்ளார்.