மதுரை:

சிஏஏக்கு எதிராக மதுரையில் இன்று பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இதில்  ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள், பெண்கள்  உள்பட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்திலும் போராட்டங்கள் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில்,முஸ்லிம் ஐக்கிய ஜமாத் சார்பில் கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி,  மதுரையில் பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்ற பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இந்த பேரணிக்கு முன்னாள் வக்பு வாரிய தலைவர் ஹைதர் அலி தலைமை தாங்கினார். பேரணியானது  மதுரை தெற்குவாசலில் இருந்து தொடங்கி, தெற்குவாசல், தவிட்டுச்சந்தை, கீழமாசி வீதி வழியாக ஓபுளா படித்துறையில் முடிவடைந்தது. அதையடுத்து, அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த பேரணியில்  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், எஸ்.டி.பி.ஐ., பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் கலந்துகொண்டன. தென்மாவட்டங்களைச் சேர்ந்த  ஆயிரக்கணக்கான பெண்கள், முஸ்லிம்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். பலர் தேசிய கொடியுடன் பங்கேற்றனர்.

இதனால் மதுரையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.