சென்னை: தலைநகர் டெல்லியில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு ஆகியோர் மத்திய அமைச்சர்களை சந்தித்து தமிழகத்தின் கோரிகைகள் குறித்து வலியுறுத்தினார்.
டெல்லியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது ஜல் ஜீவன் திட்டத்தில் நிலுவையில் உள்ள மத்திய அரசின் ரூ.1,706 கோடியை விடுவிக்கக் கோரி அமைச்சர் மனு அளித்தார். இது குறித்து அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:- மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை இன்று நேரில் சந்தித்து பேசினேன். அப்போது மத்திய அரசு கடந்த ஆண்டு ஜல் ஜீவன் இயக்கத்திற்கு ஒதுக்கீடு செய்த நிதியில் கடந்த ஆண்டு வரை வழங்க வேண்டிய நிலுவைத் தொகை, இந்த நிதி ஆண்டிற்கு வழங்க வேண்டிய தொகை மற்றும் இத்திட்டத்தினை 2028-ம் ஆண்டு வரை நீட்டிப்பு செய்வது தொடர்பாக அவருடன் விவாதித்தேன்.
இச்சந்திப்பின்போது தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ் விஜயன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, திருச்சி என்.சிவா, டி.எம்.செல்வகணபதி, அருண் நேரு, டி.மலையரசன், எ.மணி, கணபதி ப.ராஜ்குமார், கே.ஈஸ்வரசாமி, நகராட்சி நிர்வாக துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா.கார்த்திகேயன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தி, ஆகியோர் உடனிருந்தனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து, மத்திய வீட்டு வசதித்துறை அமைச்சர் மனோகர்லால் கட்டாரை அமைச்சர் நேரு சந்தித்து, மனு கொடுத்தார். மேலும், 100 நகரங்கள் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு 15 நகரங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
அதுபோல, டெல்லியில் மத்திய நிதியமைர் நிர்மலா சீத்தாராமனை அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்து பேசினார். டெல்லியில் நாடாளுமன்ற அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதி விகிதாச்சார பிரச்னை மற்றும் ஜிஎஸ்டி வரி பங்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மத்திய அமைச்சரிடம் தங்கம் தென்னரசு கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை அமைச்சர் தங்கம் தென்னரசு மரியாதை நிமித்தமாக சந்தித்தாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பின்போருது, தமிழக அரசின் வணிகவரித் துறை முதன்மைச் செயலாளர் பிஜேந்திர நவநீத், நிதித்துறை துணைச் செயலாளர் பிரத்தீக் தயாள் ஆகியோர் இந்த சந்திப்பின்போது உடனிருந்தனர்.