சென்னை:
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், விதிகளை மீறியவர்கள் மீது காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்த தகவலை கால்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா காட்டுத்தீ போல் வேகமாக பரவ தொடங்கியதால், அதை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக பிரதமர் மோடி கடந்த 24-ந் தேதி இரவு அறிவித்தார். ஊரடங்கு அமலுக்கு வந்தபோது இந்தியாவில் கொரோனாவால் 519 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். 9 பேர் உயிரிழந்து இருந்தனர்.
ஊரடங்கை தொடர்ந்து மாநில, மாவட்ட எல்லைகள் சீல் வைக்கப்பட்டு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக் கப்பட்டு உள்ளன. கடைகள், வர்த்தக நிறுவனங்கள், அலுவலகங்கள் மூடப்பட்டு பஸ், ரெயில் உள்ளிட்ட அனைத்து வாகன போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு உள்ளன. மருத்துவம், குடிநீர், பால் சப்ளை போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதனால் கடந்த 14 நாட்களாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள்.
தவிர்க்க முடியாத பணியை தவிர வேறு எதற்காகவும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும் அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ள போதிலும் சிலர் அதை பொருட்படுத்தாமல் நடந்து கொள்வதை காண முடிகிறது.
இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த முடியவில்லை. கொரோனாவால் ஏற்படும் உயிர் இழப்புகளும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் சில மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் இல்லை என்றபோதிலும், கொரோனா பரவிய மாவட்டங்களில் அதன் தாக்கம் அதிகரித்தபடி உள்ளது.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நேற்றுடன் 14 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், நாடு முழுவதும் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 117 ஆக உயர்ந்து இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,420-ஐ தாண்டிவிட்டது. இதனால் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவது எப்படி? என்று தெரியாமல் அதிகாரிகள் திணறிக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில், காவல் துறையினர் வெளியிட்டுள்ள தகவலில், தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு பெற்றப்பட்டுள்ள நிலையில், இதுவரை விதிகளை மீறியவர்கள் மீது ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 833 பேர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி இதுவரை ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 117 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 87 ஆயிரத்து 577 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 833 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 32 லட்சத்து 83 ஆயிரத்து 844 பேருக்கு அபாரதம் விதிக்கப்படுள்ளதாகவும் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.