சென்னை:  தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் 8 நாட்கள் மட்டுமே, அதாவது வரும் 22ந்தேதி வரை நடைபெறுகிறது,. இதற்கான முடிவு அலுவல் ஆய்வு குழுவில் எடுக்கப்பட்டு உள்ளதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

தமிழ்நாடு சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர், ஆண்டின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. ஆனால், தனது கோரிக்கை ஏற்கபடவில்லை என்று கூறிய ஆளுநர், உரையை முழுவதும் வாசிக்காமல், புறக்கணித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஆளுநர் உரை அவைக்குறிப்பில் இருந்து நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆளுநரின் செயல் சரியல்ல என்று பேரவைத்தலைவர் சாடினார்.

இதைத்தொடர்ந்து, பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் கூட்டுவது என்பது தொடர்பாக பேரவை அலுவல் ஆய்வுக் குழு கூடியது. இதுதொடர்பான அறிவிப்பை சபாநாயகர் அப்பாவு பேரவையில் அறிவித்தார்.

அதன்படி, கூட்டத் தொடரை நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யும்.  நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ள நிலையில், வரும் 22-ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில்  எடுக்கப்பட்டுள்ள முடிவின்படி, வரும் 15ம் தேதிவரை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெறும் என்றும், அதைத்தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் பதில் அளிப்பார் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.

தொடர்ந்து,  வரும் 16, 17, 18 ஆகிய நாட்கள் விடுமுறை என்றும் வரும்  19ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அதன்மீதான விவாதங்கள் மற்றும் பதிலுரை  22ந்தேதி வரை நடைபெறும். அன்றைய தினத்துடன் அவை நிறைவு பெறுகிறது என்றும் சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்