சென்னை,

மிழக சட்டசபையின் 3வது நாள் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பான திருத்த சட்டமுன்வடிவு பேரவையில்  தாக்கல் செய்யப்பட்டது.

மேலும், தொழிலாளர் நல நிதி மற்றும் தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் திருத்த சட்டமுன்வடிவும் தாக்கல் செய்யப்பட உள்ளது.

தமிழக சட்டசபையில் முதல் கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (8ந்தேதி) தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்றைய கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பான திருத்த சட்டமுன்வடிவு பேரவையில்  தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளம் தற்போதைய சம்பளத்தில் இருந்து 100 சதவிகிதம் உயர்த்தப்பட்டு இரு மடங்காக உயர்கிறது. அதன்படி தற்போது 55 ஆயிரம் சம்பளம் வாங்கும் சட்டமன்ற உறுப்பினர்கள், இனிமேல் 1 லட்சத்துக்கு 5 ஆயிரம் சம்பளம் வாங்குவார்கள்.

தமிழகத்தில் சம்பள பாக்கி, ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற் சங்கத்தினர் 7வது நாளாக போராடி வரும் நிலையில், அவர்களுக்கு சம்பளம் கொடுக்க  மனம் உள்ளது ஆனால் பணம் இல்லை என்று கூறிவரும் அரசு, தற்போது சட்டமன்ற உறுப்பினர்களுக்கான சம்பளத்தை டபுளாக உயர்த்தி இருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.