சென்னை: தமிழக அரசு சார்பில் 2 ஆயிரம் மின்சார பேருந்துகள் வாங்கப்பட உள்ளதாக இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் நிதியமைச்சர் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, அந்த மின்சார பேருந்துங்கள் எங்கிருந்து எப்படி வாங்கப்பட உள்ளது என்பது குறித்து சுப்ரியாசாஹூ டிவிட் பதிவிட்டுள்ளார்.
தமிழக பட்ஜெட்டில் ஏராளமான வளர்ச்சி பணிகள் அறிவிக்கப்பட்டு உள்ளதுடன், சுற்றுசூழலை பாதுகாக்க 2ஆயிரம் மின்சார பேருந்துகள் வாங்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவராக உள்ள சுப்ரியா சாஹூ டிவிட் பதிவிட்டுள்ளார். அதில், “ பசுமை இயக்கம் மற்றும் காலநிலை நடவடிக்கைக்கு ஒரு பெரிய உந்துதலில், ஜெர்மன் மேம்பாட்டு வங்கி யான கே.எப்.டபுள்யூ-ன் ஆதரவுடன் தமிழக அரசு சுமார் 2 ஆயிரம் மின்சார பேருந்துகளை அறிமுகப்படுத்த உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஆட்சியில் மின்சார பேருந்துகள் இயக்கப்பட்டது. பின்னர் பல்வேறு காரணங்களால் நிறுத்தப் பட்டது. இந்த நிலையில், தற்போது, தமிழ்நாட்டில் மின்சார பேருந்துகளின் செயல்பாட்டை அதிகரிப்பதற்காக 2 ஆயிரம் மின்சார பேருந்துகளை அறிமுகப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.