சென்னை: தமிழக அரசின் நடமாடும் கால்நடை மருத்துவ வாகனம் மூலம், சுமார் 8.98 லட்சம் கால்நடைகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதாக கால்நடை பராமரிப்பு துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் கால்நடைகளின் நலனைப் பாதுகாக்கவும், கிராமப்புற விவசாயிகளின் கால்நடைகளுக்கு உரிய மருத்துவ சேவைகளை வழங்கவும் நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள் திட்டத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2024;k ஆண்டு ஆகஸ்டு மாதம் 20-ந்தேதி தொடங்கி வைத்தார்.

நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள் மூலம் கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை, செயற்கை கருவூட்டல், நோய் தடுப்பு மருந்து வழங்கல், சிறிய அறுவை சிகிச்சைகள் மற்றும் நோய் கண்டறிதல் போன்ற பல்வேறு சேவைகளை வழங்குகின்றன. இந்த வாகனங்களில் ஒரு கால்நடை டாக்டர், உதவியாளர் மற்றும் டிரைவர் ஆகியோர் பணியாற்றுகின்றனர். இந்த நடமாடும் கால்நடை மருத்துவ வாகனத்தில், நவீன உபகரணங்களான ஹைட்ராலிக் லிப்ட், ஜெனரேட்டர், மருத்துவ கருவிகள் மற்றும் நோய் கண்டறியும் கருவிகள் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. விவசாயிகள், 1962 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு கால்நடைகளுக்கு மருத்துவ உதவி பெறலாம்.

இந்த திட்டத்தின் கீழ், 49 ஆயிரத்து 512 கிராம முகாம்கள் மூலம் 8 லட்சத்து 98 லட்சத்து 503 கால்நடைகளுக்கு இதுவரை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக கால்நடை பராமரிப்புத்துறை தெரிவித்துள்ளது. நடமாடும் கால்நடை மருத்துவத்தின் பயனாக, கால்நடைகளின் இறப்பும் கணிசமான அளவு குறைந்திருப்பதாக கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், நடமாடும் கால்நடை மருத்துவ வாகன சிறப்பு முகாம்களை நடத்தவும் திட்டமிட்டிருப்பதாக அதிகாரிகள் தகவல்கள் தெரிவித்துள்ளனர்.