சென்னை: தமிழ்நாட்டில், கல்வி மேம்பாட்டிற்கான மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் தமிழகஅரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் டிவிட் மூலம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர் அன்பில் தனது டிவிட்டர் பக்கத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தொடர் முயற்சிகளின் பலனாக இந்தியாவிலேயே முதன்முறையாக கல்வி மேம்பாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து கையெழுத்திட்டுள்ளோம். TEALS(Technical Education And Learning Support) எனும் திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் வரலாற்று சிறப்புமிக்க இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
தமிழ்நாட்டின் கிராம பகுதிகளைச் சேர்ந்த மாணவச் செல்வங்களுக்கு அனைத்து தொழில்நுட்பம் சார்ந்த புரிதலும் சென்றடைய TEALS திட்டம் செயல்படுத்தப்படும். முதல்கட்டமாக 13 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு 3800 மாணவர்கள் பயன்பெறும் வகையில் TEALS திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. கிராமபுற மாணவர்களின் அறிவியல் திறனில் மிகப்பெரிய வளர்ச்சியை ஏற்படுத்த போகும் இத்திட்டம் அனைவராலும் பாராட்டப்படும் என மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறோம். மற்ற நாட்டின் மாணவர்களுக்கு இணையான கற்றல் தொழில்நுட்பத்தை நமது மாணவர்களுக்கும் உருவாக்குவோம்!
இவ்வாறு பதிவிட்டுள்ளார்.