சென்னை: தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்துக்கான (100நாள் வேலை திட்டம்) நிதியை விடுவிக்கவேண்டும் மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்துக்கான நிதியை விடுவிக்க கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளதாகவும், நிதியை மத்திய அரசு விடுவித்ததும், பணியாளர்களின் நிலுவை ஊதியம் அவர்களின் வங்கிக்கணக்குகளுக்கு நேரடியாக வரவு வைக்கப்படும் என ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித்திட்டம் தமிழ்நாட்டிலுள்ள 37 மாவட்டங்களில், 388 ஊராட்சி ஒன்றியங்களில் बीबा 12525 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்படுகிறது. ஊரகப்பகுதிகளில் உடல் உழைப்பு சார்ந்த வேலை வழங்க முன்னரும் மக்களுக்கு வேலை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
அதன்படி இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 85.19 லட்சம் குடும்பங்களுக்கு வேலை அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 1கோடியே 9லட்சம் தனிநபர்களுக்கு வேலை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.2024-25 ஆம் ஆண்டில் 20 கோடி மனித சக்தி நாட்கள் வேலை வழங்க ஒன்றிய அரசால் அனுமதிக்கப்பட்ட நிலையில் இதுவரை 28.45 கோடி மனித சக்தி நாட்கள் பணி வழங்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட வேலை நாட்களுக்கு இது 142 சதவீத சாதனையாகும்.
பணிகளை மேற்கொள்ளும் மொத்த பணியாளர்களில் பெண்கள் 86 சதவீதமாகவும். தாழ்ந்தப்பட்ட வகுப்பினர் 27 சதவீதமாகவும் பழங்குடியினர்கள் பங்களிப்பு 1.63 சதவீதமாக வும் உள்ளது. எனவே. இத்திட்டத்தின் கீழ் அதிக பயனடைபவர்கள் பழங்குடியினராக பெண்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் மக்கள் தொகை அடிப்படையில் இவ்வகுப்பினரின் பங்களிப்பு அதிக அளவில் உள்ளது. மேலும்,இத்திட்டத்தின்கீழ் 1.10 லட்சம் மாற்றுத்திறனாளிகளும் பயனடைந்துள்ளனர்.
எனவே. இத்திட்டம் ஊரகப் பகுதிகளில் உள்ள மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கு இத்திட்டம் பெரும்பங்களிப்பை வழங்கி வருகிறது. ஆனால் சமீப காலமாக ஒன்றிய அரசு இத்திட்டத்திற்கான நிதி விடுவிப்பதில் தாமதம் செய்வதால் இத்திட்டப் பணியாளர்களுக்கு குறித்த காலத்தில் ஊதியம் வழங்குவது காலதாமதம் ஏற்படுகிறது தற்போதைய நிலையில் இத்திட்ட பணியாளர்களுக்கான ஊதிய நிலுவை 2400 கோடியாகவும், திட்டத்தின் கீழ் கட்டப்படும் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுக்கான பொருட்கூறு நிலுவை 852 கோடியாகவும் உள்ளது.
நிலுவையிலுள்ள திட்ட நிதியை விடுவிக்ககோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஒன்றிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து நிலுவையிலுள்ள நிதியை விரைவில் விடுவிக்க கோரிக்கை விடுத்துள்ளார். நிதி பெறப்பட்டதும் பணியாளர்களின் நிலுவை ஊதியம் அவர்களின் வங்கிக்கணக்குகளுக்கு நேரடியாக வரவு வைக்கப்படும்”.
இவ்வாறு கூறியுள்ளார்.