சென்னை: தாலிக்குத் தங்கம், திருமண உதவித்தொகை திட்டத்தில் புதிய விதிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
தமிழக அரசின் சமூக நலத்துறையின் மூலம் பெண்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு ஏழைப்பெண்கள் திருமண நிதி உதவி திட்டம், ஈ.வெ.ரா மணியம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவி திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதியுதவி திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமணம் நிதியுதவி திட்டம் என ஐந்து வகையான திருமண நிதிஉதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
மறைந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுகஆட்சியில் இந்த திட்டங்களில் பயனர்களுக்கான சலுகைகள் மேலும் அதிகரிக்கப்பட்டன. அதன்படி, பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு, தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் மூலம் 8 கிராம் தங்கமும், ரூ.50,000 ரொக்கமும் வழங்கப்படுகிறது. மேலும் அதற்கு கீழ் கல்வித்தகுதி உள்ள பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.25,000 ரொக்கமும் வழங்கப்படுகிறது. ஆனால், இந்த திட்டங்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும், ஏழை பெண்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும், ஏமாற்றின் அரசின் திட்டப்பலன்களை பெற்று வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதையடுத்து, தற்போது ஸ்டாலின் தலைமையிலான தமிழகஅரசு புதிய விதிகளை அறிவித்து உள்ளது. , அரசின் சலுகைககள் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதால் இப்பொழுது புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி,
தாலிக்கு தங்கம் திட்டத்திற்கு விண்ணப்பிக்க நபர்களின் வீட்டில் யாரேனும் அரசு பணியில் இருந்தாலும் அல்லது வேறு ஏதாவது திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் உதவி பெற்றிருந்தாலும் ஆய்வு செய்து அப்படி இருப்பின் அந்த விண்ணப்பித்தனர் தள்ளுபடி செய்யவேண்டும்.
மணமகளுக்கு 18 வயதும் மணமகனுக்கு 21 வயதும் நிறைந்து இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
விண்ணப்பிக்கும் நபர்கள் கார் வைத்திருக்கக்கூடாது. மாடி வீடு இருக்க கூடாது. அப்படி இருந்தால் மனு தள்ளுபடி செய்யவேண்டும்.
குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ 72,000 இருப்பதை வருமான சான்றிதழை அரசு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
திருமண நிகழ்ச்சி திருமண மண்டபங்களில் நடந்திருந்தால் தாலிக்கு தங்கம் திட்டத்தில் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படும்
இவ்வாறு தமிழக அரசு அறிவித்துள்ளது.