சென்னை: கல்லூரி மாணவர்கள், தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தின் கீழ் 1000 ரூபாய் உதவித்தொகை பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில், புதுமைப்பெண் திட்டத்தில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கி வரும் நிலையில், விரைவில் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் ஆகஸ்டு மாதம் முதல் தொடங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்த நிலையில், 1000 ரூபாயை பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற கடந்த மாதம் (ஜூன்) நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், தமிழ் புதல்வன் திட்டம் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் துவங்கப்படும் என்றும் இந்த திட்டம் மூலம் அரசு பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் சேர்ந்து இருக்கும் மாணவர்களின் வங்கி கணக்குகளில் மாதம் ரூ.1,000 வரவு வைக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
இதுகுறித்து சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத் துறையின் செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் வெளியிட்டுள்ள அரசாணையில், “அரசுப் பள்ளி (ஆங்கிலம் மற்றும் தமிழ் மீடியம்), அரசு உதவி பெறும் பள்ளிகளில் (தமிழ் மீடியம் மட்டும்) படித்துள்ள மாணவர்கள் தங்களின் இளங்கலை பட்டம், தொழிற்பயிற்சி, பட்டயக் கல்வி ஆகியவற்றை பெறும் காலம் வரை ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தப்படுகிறது.
மத்திய ஆதார் சட்டப்படி சில அறிவுரைகளை பயனாளிகளுக்கு அரசு இதன் மூலம் வழங்குகிறது. இந்த திட்டத்தின் பயனை பெற தகுதியுள்ள மாணவன் தனக்கென்று ஆதார் எண் வைத்திருக்க வேண்டும். அல்லது, ஆதார் எண்ணை பெறுவதற்கு விண்ணப்பித்திருக்க வேண்டும்.
ஆதார் எண் இல்லாத மாணவர்கள், அந்த எண்ணை பெறுவதற்காக, அதற்கான மையங்களுக்கு சென்று விண்ணப்பித்தல் வேண்டும். ஆதார் எண் இல்லாத நிலையிலும் இந்த உதவித்தொகையைப் பெற மேலும் சில அடையாள ஆவணங்களில் ஏதாவது ஒன்றை அளிக்க வேண்டும்.
அதன்படி, ஆதார் எண்ணுக்காக விண்ணப்பித்துள்ள அடையாளச் சீட்டு; ஆதார் எண்ணுக்காக விண்ணப்பித்துள்ளதற்கான மனுவின் நகல்; வங்கி அல்லது தபால் கணக்கு புத்தகம்; பான் அட்டை, பாஸ்போர்ட், ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை; மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்ட அட்டை; கிசான் கணக்கு புத்தகம்; ஓட்டுனர் உரிமம்; தாசில்தார் அல்லது ‘கெசடட்’ அதிகாரி அளித்துள்ள அடையாளச் சான்றிதழ், இவற்றில் ஏதாவது ஒன்றை அளிக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களும் இதில் தேவையான ஏற்பாடுகளை செய்ய வேன்டும். இந்த தகவலை அனைத்து மாணவர்களுக்கும் தெரியும் வகையில் கல்வி நிறுவனங்கள் விளம்பரப்படுத்தி, அருகிலுள்ள ஆதார் மையங்களுக்கு சென்று ஆதார் எண்ணை பெற அறிவுறுத்த வேண்டும்.
ஆதார் மையம் இல்லாத பகுதி என்றால், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களே ஆதார் நம்பரை பெறும் வசதிகளை ஏற்படுத்தி மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்ய உதவ வேண்டும்”
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை நடப்பு கல்வியாண்டில் செயல்படுத்த ரூ.360 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்கீழ் தோராயமாக 3.28 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர். மேலும் நேஷனல் ஆட்டோமேட்டட் கிளியரன்ஸ் ஹவுஸ் என்ற பணப்பட்டுவாடா முறையில் மாதந்தோறும் வங்கியில் செலுத்தப்படும் என்றும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை செயல்படுத்த ஆண்டுக்கு ரூ.401 கோடி செலவாகும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த திட்டத்தில் பயன்பெற மாணவர்களுக்கு ஆதார் கட்டாயம் என்றும் கூறப்பட்டுள்ளது.மேலும் தகுதியான மாணவர்கள் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இது தொடர்பான தகவல்களை மாணவர்களுக்கு தெரியும் வகையில், கல்வி நிறுவனங்கள் விளம்பரப்படுத்த வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.
இத்திட்டத்திற்கு தகுதி பெறுவதற்கான விதிமுறைகள் பின்வருமாறு..
1. வருமான உச்ச வரம்பு. இனம் மற்றும் ஒதுக்கீடு ஆகிய எந்தவொரு பாகுபாடும் இன்றி, 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்ற மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள். தமிழகத்தில் உள்ள எவ்வித கல்வி நிறுவனங்களிலும் உயர்கல்வி பயிலும் மாணவராக இருத்தல் வேண்டும். மேலும், மாணவர் பயிலும் நிறுவனம் மற்றும் பாடப்பிரிவு அரசால் அங்கீகரிக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும்.
2. அரசுப் பள்ளிகளிலும் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியிலும் 8 ஆம் வகுப்பு அல்லது 9 ஆம் வகுப்பு அல்லது 10 ஆம் வகுப்பு வரை பயின்று தொழிற்பயிற்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களும் இத்திட்டத்தின் மூலம் பயனடைய தகுதி உடையவர்கள் ஆகிறார்கள்.
3. தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இளங்கலை பட்டம், தொழிற்சார் படிப்புகளில் சேர்க்கையில் முன்னுரிமை வழங்குதல் சட்டம், 2021ல் குறிப்பிட்டுள்ளவாறு “அரசுப் பள்ளி” என்பது அரசுப் பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகள். நகராட்சிப் பள்ளிகள், ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை பள்ளிகள். கள்ளர் மறுவாழ்வு பள்ளிகள். வனத் துறை பள்ளிகள் மற்றும் கல்விக்கான அடிப்படை உரிமைச் சட்டத்தின் கீழ் கல்வி பெறும் மாணவர்கள் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையால் நடத்தப்படும் அரசு சேவை இல்லங்கள் / அரசு குழந்தைகள் காப்பகங்கள் போன்றவற்றை உள்ளடக்கியது.
5. தொலைதூர / அஞ்சல் வழியிலும், அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்களிலும் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகையை பெற இயலாது.
6. வேறு ஏதேனும் உதவித் தொகை பெற்று வருபவராக இருப்பினும். இத்திட்டத்தில் பயன்பெற தகுதி உடையவராவர்.
7. மற்ற மாநில பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் இத்திட்டத்தில் பயனடைய தகுதி அற்றவர்களாவர்.
8. ஒரே குடும்பத்திலிருந்து எத்தனை மாணவர்கள் தகுதி பெற்றிருப்பினும், அனைவரும் இத்திட்டத்தின் கீழ் பயனடைய விண்ணப்பிக்கலாம்.
9. பள்ளிப் படிப்பிற்கு பின்னர். உயர்கல்வி பயின்று வரும் மாணவர்கள் மட்டுமே இத்திட்டத்தில் பயன்பெற தகுதியுடையவராவர். ஒருங்கிணைக்கப்பட்ட பாடப்பிரிவில் (Integrated courses) பயிலும் மாணவர்களுக்கு மட்டும் முதல் மூன்று ஆண்டுகள் இத்திட்டத்தின் கீழ் ஊக்கத் தொகையினை பெற இயலும்.
11. பிற மாநிலங்களில் ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் IIT. NIT, IISER போன்ற தகைசால் கல்வி நிறுவனங்களில் பயிலும் அரசுப் பள்ளிகளில் பயின்ற மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியில் பயின்ற மாணவர்களும் இத்திட்டத்தில் பயன்பெறுவர். இவர்கள் மாநில திட்ட மேலாண்மை அலகின் மூலமாக அணுகலாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.