சென்னை:  தமிழ்நாட்டில் வன உயிரினங்களை பாதுகாக்க நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.


தமிழ்நாட்டில் அழிந்து வரும் வன உயிரினங்களை பாதுகாக்க நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசாணை வெளியீடு செய்துள்ளது. தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு வெளியே உள்ள அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற வன உயிரின வாரியக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,   வன உயிரினப் பாதுகாப்புச் சட்டத்தின்படி பாதுகாக்கப்பட்ட வாழ்விடங்களைத் தேர்வு செய்தல், வன உயிரினங்களின் மேன்மை, அங்கு வாழக்கூடிய வன உயிரினங்கள் மற்றும் தாவர இனங்களின் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு வருவதாக கூறியதுடன்,   வனப்பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களின் தேவைகளைக் கேட்டறிந்து, ஒரு இணக்கமான சூழலை ஏற்படுத்தி, வன உயிரினப் பாதுகாப்புக்குக் குந்தகமின்றி செயல்படுத்துதல் போன்ற இதர இனங்கள் பற்றி விவாதித்தல், உரிய ஆலோசனைகளை பெற்று நடைமுறைக்கு கொண்டு வருதல், வன உயிரினப் பாதுகாப்பு தொடர்பாக வன வாரியம் முடிவு செய்யும் என்று கூறியிருந்தார்.

மேலும்,   இந்திய தேசிய பல்லுயிர் ஆணைய அறிக்கையின்படி தாவரங்களின் அடிப்படையில் தமிழ்நாட்டிலுள்ள தாவரங்களின் வளமை என்பது இந்தியாவிலேயே முதன்மை யாக உள்ளது. இவை மட்டுமின்றி வன உயிரினங்களிலும் 5 புலிகள் காப்பகங்கள், 5 யானை காப்பகங்கள், 3 உயிர்க்கோளகக் காப்பகங்கள், 5 தேசிய பூங்காக்கள், 17 பறவைகள் காப்பகங்கள், 17 காட்டுயிர்க் காப்பகங்கள் என நமது மாநிலம் வன உயிரின வளமைமிக்க ஒரு மாநிலமாகத் திகழ்கிறது.

வனவிலங்குகளின் வேட்டை, கடத்தல் உள்ளிட்ட பிற குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கு சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு வன மற்றும் வன உயிரின குற்றத் தடுப்பு பிரிவு அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்கீழ், மாநிலத்தில் 3 மண்டலங்களிலும் குற்றத்தடுப்புப் பிரிவுகள் அமைத்து அரசு ஆணையிட்டுள்ளது என்று கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து,  தமிழ்நாடு அரசு யானைகளைக் கண்காணிக்கும் வனக்காவலர்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துவதற்கும், வேட்டைத்தடுப்பு முகாம்களை அமைப்பதற்கும், ஆளில்லா வாகனங்கள், ஆளில்லா விமானங்கள், இரவு பார்வை கேமராக்களை வாங்குவதற்கும், வேட்டைத் தடுப்புப் படைகளை உருவாக்குவதற்கும், யானைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் என 2 கோடியே 41 லட்சம் ரூபாயை அனுமதித்துள்ளதாக கூறியிருந்தார். மேலும்,   பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமை காலநிலை மாற்ற எதிர்வுணர்வு திட்டத்தை 920 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பில் ஜப்பானிய பன்னாட்டு கூட்டுறவு நிறுவன உதவியுடன் செயல்படுத்தப்பட இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது,  தமிழ்நாட்டில் வன உயிரினங்களை பாதுகாக்க நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.