சென்னை: கரும்புக்கான கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ.3,151 நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

2024-25ம் ஆண்டு பருவத்திற்கு கரும்புக்கான கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ. 3,151 நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கூட்டுறவுத்துறையின் கீழ் 12 சர்க்கரை ஆலைகளும், 2 பொதுத்துறை ஆலைகளும், 16 தனியார் ஆலைகளும் உள்ளன. இங்கு விவசாயிகள் வழங்கும் கரும்புக்கான கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு கரும்பு கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்து உள்ளது. அதன்படி, 9.50% அல்லது அதற்கு குறைவான சர்க்கரைத் திறன் கொண்ட கரும்பு டன்னுக்கு ரூ. 3,151 ஆகவும், 9.85% சர்க்கரைத் திறன் கரும்புக்கு ₹3,267 ஆகவும், 10.10% சர்க்கரைத் திறன் கொண்ட கரும்புக்கு ₹3,344.20 ஆகவும், 10.65% சர்க்கரைத் திறன் கொண்ட கரும்புக்கு ₹3,532.80 ஆகவும் கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
கரும்பை பொறுத்தவரையில் ஒவ்வொரு பருவத்திற்கும் கொள்முதல் விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்யும். அதனை அடிப்படையாகக் கொண்டு மாநில அரசு விலையை நிர்ணயம் செய்யும். மாநில அரசின் ஊக்கத்தொகையும் விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
[youtube-feed feed=1]