சென்னை,

மிழகத்தில் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் 8வது நாளாக தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், நாய் பிடிக்கும் வண்டியை, பொதுமக்களின் போக்குவரத்துக்கு உபயோகப்படுத்தி வருகிறார்கள் அரசு அதிகாரிகள்.  இது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

அரசு  பஸ் ஸ்டிரைக் காரணமாக, பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளின் பயணத்திற்காக   தமிழக அரசு சார்பில் தனியார் நிறுவனங்களின் பஸ்கள், வேன்களை இயக்கி வருகிறது. மேலும் தனியார் டிரைவர்களையும், தினக்கூலி அடிப்படையிலும் டிரைவர்கள், கண்டக்டர்களை நியமித்தும் பேருந்துகளை இயக்கி வருகிறது.

சுமார் 30 சதவிகித பேருந்துகள் மட்டுமே இவ்வாறு இயக்கப்படு வதாலும், தற்காலிக டிரைவர்களால் ஆங்காங்கே விபத்துக்கள் ஏற்படுவதாலும் பொதுமக்கள் பேருந்துகளில் பயணிக்க தயங்கி வருகிறார்கள்.

இந்நிலையில், சென்னையில் நாய் பிடிக்கும் வண்டி மூலம் பொதுமக்களை ஏற்றி இறக்கி வருகிறார்கள்.

சென்னை புளியந்தோப்பில் உள்ள நாய்பிடிக்கும் முகாமுக்கு சொந்தமான நாய் வண்டி இன்று சுத்தம் செய்யப்பட்டு பயணிகளின் போக்குவரத்துக்காக இயக்கப்பட்டது.

இந்த நாய் வண்டி மூலம் பொதுமக்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு அழைத்துச்சென்றனர்.

நாய் வண்டியில் பொதுமக்களை ஏற்றிச்சென்ற செயல் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இருந்தாலும், தற்போதைய சூழலில், வேறு வழியில்லாத காரணத்தால் பொதுமக்கள் அந்த வண்டியை உபயோகப்படுத்த வேண்டிய சூழல் உருவாகி உள்ளதாக கூறப்பட்டது.

நாய் வண்டியில் ஏறிய வடசென்னையை சேர்ந்த மூதாட்டி ஒருவர் கூறும்போது, பஸ் தொழிலாளர்களை அழைத்து, அவர்களை சமாதானப்படுத்த முயற்சி செய்யாத, நன்றிகெட்ட எடப்பாடி  ஆட்சியில், நன்றியுள்ள பிராணியான நாய்களை ஏற்றிச்செல்லும் வண்டிதான் எங்களுக்கு கிடைத்துள்ளது… என்ன செய்ய… என்று  கூறினார்.