சென்னை: தமிழக முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் தொடர்ந்து தங்கியிருக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவி வகித்தபோது, அவருக்கு அடையாறு கிரின்வேஸ் சாலையில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பங்களா ஒதுக்கப்பட்டது. அந்த வீட்டில் அவர் கடந்த 10 ஆண்டுகளாக இருந்து வருகிறார். தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால், அரசு பங்களாவில் குடியிருந்து வந்த முன்னாள் அமைச்சர்கள் தங்களது பங்களாக்களை, புதிய அமைச்சர்களின் தேவைக்காக காலி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போது எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சி தலைவராக இருப்பதால், அவர், தான் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வரும் சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் தொபடர்ந்து தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் என தமிழகஅரசு கோரிக்கை வைத்திருந்தார்.
இதை ஏற்றுக்கொண்ட ஸ்டாலின் அரசு, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பழைய பங்களாவிலேயே தொடர்ந்து வசிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் பங்களாவை காலி செய்ய ஓ.பன்னீர்செல்வம் அவகாசம் கேட்டுள்ளார். தனது தம்பி ஓ.பாலமுருகன் மறைவால் முழுமையாக பங்களாவை காலி செய்ய முடியவில்லை என்று கூறி அவகாசம் கேட்டுள்ளார். அதே சமயம் மற்ற அமைச்சர்கள் வீட்டை காலி செய்துள்ள நிலையில் அங்கு புனரமைப்புப் பணிகள் நடந்து வருகின்றன. இதை தொடர்ந்து புதிய அமைச்சர்கள் இங்கு குடியேறுவார்கள்.