தகவல் தொழில்நுட்பம் தொடர்பான கூட்டங்களில் கலந்து கொள்ள டெல்லி சென்றுள்ள தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று சந்தித்தார்.

“வருமான வரி தரவுகளை அணுக தமிழ்நாடு அரசுக்கு நிதி அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதாகவும் வருமான வரித் தரவுகளுடன் அப்ளிகேஷன் புரோகிராமிங் இன்டர்ஃபேஸ் (ஏபிஐ) இணைப்பைப் பெறும் முதல் மாநிலமாக தமிழகம் விளங்குவதாகவும்” பி.டி.ஆர். தெரிவித்தார்.

மேலும், “இந்த நடவடிக்கையானது அரசின் திட்டங்கள் மற்றும் மானியங்களின் செயல்திறன் மற்றும் துல்லியத்தை அதிகரிக்கும்” என்றும் கூறினார்.

வருமான வரி, ஆதார், கோவிட்-19 போன்றவற்றின் தரவுகளை அணுக மாநில அரசுகளை அனுமதிக்கும் தரவு பகிர்வு நெறிமுறையை தமிழ்நாடு வலியுறுத்தி வந்த நிலையில் அதற்கான அனுமதி வழக்கப்பட்டதற்கு நன்றி தெரிவிக்க அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக விளக்கமளித்துள்ளார்.

தவிர தான் தமிழக நிதி அமைச்சராக பதவி வகித்தபோது தனக்கு ஆதரவு வழங்கிய மத்திய நிதிச் செயலாளர் டி.வி.சோமநாதன் மற்றும் CBDT தலைவர் நிதின் குப்தா ஆகியோரையும் சந்தித்து நன்றி தெரிவித்ததாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.