சென்னை: இந்த ஆண்டு டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தைச் சேர்ந்த இளம்பெண் இளவேனில் வாலறிவன் தகுதி பெற்றுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தின் கடலூர் மாவட்டதைச் சேர்ந்தவரான இளவேனில் வலறிவான் துப்பாக்கி சுடும் போட்டியில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். கடந்தாண்டு ஜெர்மனியில் நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் இளவேனில் வாலறிவன் தங்கப் பதக்கம் வென்றார். ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் இரண்டு முறை தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
கடந்த ஆண்டு தங்கப்பதக்கத்தை வென்றபோது, ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என விருப்பம் என்றும் அதுவே, தனது லட்சியம் என கூறியிருந்தார்.
இந்த நிலையில், இளவேனில் வரும் ஜூலை மாதம் டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகியுள்ளார். அவருக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், இளவேனில் வாலறிவன் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகியுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் அவரது வெற்றிப்பயணம் மென்மேலும் சிறக்க நல்வாழ்த்துகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.