டெல்லி: தமிழக மீனவர்கள் கைது விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினர் முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை கொடுத்தனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்திடக் கோரி, மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் திரு.வி.முரளிதரன் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுதிய கடிதத்தினை, நாடாளுமன்ற உறுப்பினர் திரு.டி.ஆர்.பாலு அவர்கள் தலைமையிலான குழுவினர் நேரில் அளித்தனர்
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு மீனவர்கள், படகுகளை விடுவிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகிய இடங்களில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். அவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக-வின் நாடாளுமன்ற குழு தலைவராக இருக்க கூடிய டி.ஆர் பாலு தலைமையில் ராமநாதபுரம் தொகுதியின் எம்.பி நவாஸ் கனி மற்றும் பாதிக்கபட்ட மீனவர்களின் குடும்பத்தினர் ஆகியோர் ஒன்றிய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரனை நேரில் சந்தித்து மனு கொடுத்துள்ளனர். திமுக தலைவரும், தமிழகத்தின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை அவர்கள் ஒன்றிய இணையமைச்சரிடம் கொடுத்துள்ளனர்.
இலங்கை கடற்படை தொடர்ந்து தமிழ்நாடு மீனவர்களை மீன்பிடிக்க செல்லும் போது கைது செய்வது, சிறைபிடிப்பது, அவர்களை தாக்குவது என்பது தொடர் கதையாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னதாக கூட ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 37 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். அவர்கள் கடலில் மீன்பிடித்து கொண்டிருக்கும் போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், 37 ராமேஸ்வரம் மீனவர்கள், அவர்கள் வந்த 5 படகுகளையும் சிறைபிடித்து இலங்கைக்கு அழைத்து சென்றனர்.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், சிறைபிடிக்க படுவதும் தொடர்ந்து நடைபெற்றுவருவதால், இதற்கு முற்றுபுள்ளி வைக்கவேண்டும் என ஏற்கனவே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார். மாலத்தீவுவிலும் தமிழ்நாடு மீனவர்கள் 12 பேர் கைது செய்யபட்டுள்ளனர். தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்படுவது தடுத்து நிறுத்தபட வேண்டும். அவர்கள் கைது செய்யபட்டால் உடனடியாக அவர்களை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கபடவேண்டும். தற்போது இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்கள் 37 பேரையும் விடுதலை செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர் பாலு தலைமையில் ஒன்றிய இணையமைச்சரை நேரில் சந்தித்து ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை வழங்கினர்.