நாகை:

பொறியியல், மருத்துவம், விவசாயம் போன்ற படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வரும் நிலையில், மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கீழ் நடத்தப்படும் பல்வேறு வகையான படிப்புகளுக்கு கடந்த மாதம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன. கடந்த மே 31ந்தேதியுடன் விண்ணப்பம் முடிவடைந்த நிலையில்,  தரவரிசை பட்டியல் ஜூன் 2-ஆவது வாரத்தில் வெளியிடப்படும் என பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவித்து உள்ளார்.

நாகப்பட்டினத்தில் செயல்பட்டு  தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக  பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுக. பெலிக்ஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,
கடந்த 2012-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் மத்திய, மாநில அரசுகளின் உதவிகளால் அபரிமித வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

தொடக்கத்தில் 3 கல்லூரிகளுடன் தொடங்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம் தற்போது 10 கல்லூரிகளைக் கொண்டுள்ளது. இங்கு  இளநிலை மீன்வள அறிவியல், இளநிலை மீன்வளப் பொறியியல், இளநிலை உயிர் தொழில்நுட்பவியல், இளநிலை உணவு தொழில்நுட்பவியல், இளநிலை தொழிற்கல்வி உள்ளிட்ட பட்டப்படிப்புகள் இங்கு பயிற்றுவிக்கப்படுகின்றன.

புதிய பட்டப்படிப்புகள்… தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம், தூத்தூக்குடி  மீனவர்கள் மட்டுமே தற்போதைய நிலையில் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்கப்படுத்தும் வகையில், தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக் கழகத்தில் இளநிலை மீன்வள மாலுமி கலை தொழில்நுட்பவியல் பி.டெக் பட்டப்படிப்பு நிகழாண்டில் தூத்துக்குடியில் தொடங்கப்படுகிறது. 4 ஆண்டு கால இந்தப் பட்டப்படிப்பில், 20 மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளனர்.

இதே போல, நாகையில் இளநிலை ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் பட்டப்படிப்பும், சென்னையில் இளநிலை வணிக நிர்வாகவியல் (மீன்வள வணிக மேலாண்மை) பட்டப்படிப்பும் நிகழாண்டில் புதிதாகத் தொடங்கப்படுகின்றன. 4 ஆண்டு கால பி.டெக் பட்டப்படிப்புகளாக இக்கல்வி பயிற்றுவிக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் தலா 20 மாணவர்கள் சேர்க்கப்படுவர்‘

மீனவர்களின் குழந்தைகளுக்கான சிறப்புப் பிரிவு இப்பல்கலைக்கழகத்தில் 2017-ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பிரிவின் கீழ் இளநிலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்புக்கு 7 இடங்களும், இளநிலை மீன்வளப் பொறியியல் பட்டப்படிப்புக்கு ஓர் இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.இந்தச் சிறப்புப் பிரிவில் சேர்க்கப்படும் மாணவர்களுக்குக் கல்விக் கட்டணம், உணவுக் கட்டணம் இலவசம் என்று தெரிவித்தார்.

மேலும்,  மாணவர் சேர்க்கைக்கு, கட்-ஆப் மதிப்பெண்கள் அடிப்படையிலான தரவரிசைப் பட்டியல் ஜூன் 2-ஆவது வாரத்தில் வெளியிடப்படும்  என்றவர்,  ஜூலை 2-ஆம் வாரத்தில் நேரடி கலந்தாய்வு நடத்தப்படும். கலந்தாய்வு தேதி மற்றும் இடம் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறினார்.